காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் 5,738 விவசாயிகளுக்கு ரூ.41 கோடி பயிர் கடன்: அமைச்சர் தா.மோ. அன்பரசன் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் 5738 விவசாயிகளுக்கு ரூ.41.19 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது என  காஞ்சிபுரத்தில் நடந்த 69வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார். காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா அரங்கத்தில் 69வது அனைத்திந்திய கூட்டுறவு  வார விழா நேற்று நடந்தது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்  துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்து, மாவட்ட அளவில் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயம் மற்றும்  போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். முன்னதாக, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில், வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள பரந்தூர் மற்றும் உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள சாலவாக்கத்தில் ரூ.76 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட துணை வேளாண் விரிவாக்க மைய கட்டிடங்களின் கல்வெட்டுகளை அமைச்சர் திறந்து வைத்தார்.

இதையடுத்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறுகையில், “கூட்டுறவு இயக்கத்தையும், கூட்டுறவு அமைப்புகளையும் மேம்படுத்த வேண்டும் என்ற நல்லநோக்குடன் ஆண்டுதோறும் நவம்பர் 14 முதல் 20 வரை இந்தியா முழுவதும் கூட்டுறவு வாரவிழா கொண்டாடப்படுகிறது. கூட்டுறவு இயக்கம் வணிக நோக்குடன் செயல்படாமல் வறுமை ஒழிப்பில் முக்கிய  பங்காற்றி வருகிறது.  கூட்டுறவு இயக்கம் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிற அமைப்பாகும். 1904ம் ஆண்டில் காஞ்சிபுரம், திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் திரூர் கிராமத்தில் விவசாய சேவை கூட்டுறவு சங்கம் முதன்முதலாக துவக்கப்பட்டது. இந்தியாவிலேயே கூட்டுறவு வங்கிகள் தொடங்கிய மாவட்டம் காஞ்சிபுரமாகும். கூட்டுறவு துறை மிகச்சிறப்பாக பணியாற்றி ஏழை, எளிய மற்றும் சமுதாயத்தில் பின் தங்கிய மக்கள், விவசாய பெருமக்கள், சிறுவணிகர்கள், மகளிர் போன்ற அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் சேவையாற்றி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் கலைஞர் காகங்கள் போல் கூடி கரைந்து, கலைந்து சென்றுவிடாமல் வளங்கொழிக்க மேகங்கள் போல் கூடுவோம்.

மேன்மையுற கூட்டுறவை நாடுவோம் என்று கூட்டுறவு இயக்கத்தை சிறப்பாக எடுத்து கூறியுள்ளார். கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 953 பயனாளிகளுக்கு ரூ.4.65 கோடி மதிப்பில் கடன் வழங்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 653 கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 3,66,347 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக முதல்வர்  அறிவித்த விலையில்லா அரிசி திட்டத்தின் மூலம் மாதம் ஒன்றுக்கு 4600 மெட்ரிக்டன் அரிசி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.145 கோடியே 31 லட்சத்து 28 ஆயிரம் நிதி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வழங்கப்படுகிறது.

கடந்த நிதியாண்டில் கூட்டுறவு துறை மூலம் 62109 பேருக்கு நகைக்கடனாக 430 கோடியே 75 லட்சமும், முதலீட்டு கடனாக 93 பேருக்கு 46 லட்சத்து 39 ஆயிரமும், பண்ணை சாரா கடனாக 297 பேருக்கு 5 கோடியே 37 லட்சமும், வீட்டு கடனாக 1494 பேருக்கு ரூ.10 கோடியே 38 லட்சமும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 20 கோடியே 30 லட்சமும், சிறு வணிக கடனாக 1347 பேருக்கு ரூ.3 கோடியே 16 லட்சமும், மாற்றுத்திறனாளிகள் 261 பேருக்கு 95 லட்சத்து 83 ஆயிரமும் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் விவசாய பெருமக்களுக்கு 9 மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள்  மற்றும் 53 தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கிகள் மூலம் நடப்பாண்டில் 5738 விவசாயிகளுக்கு ரூ.41.19 கோடி பயிர் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது”என்றார்.

நிகழ்ச்சியில், கலெக்டர் ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், வாலாஜாபாத் ஒன்றிய குழுத்தலைவர் தேவேந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் நித்யா சுகுமார், மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் ஜெய,உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: