வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு இனப்பெருக்கத்திற்காக வெளிநாட்டு பறவைகள் வருகை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் ஏரியில் இனப்பெருக்கத்திற்காக பல ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளதால் அப்பகுதியே ரம்மியமாக காட்சியளிக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சுமார் 30 ஹெக்டருக்கு பரந்து விரிந்துள்ளது வேடந்தாங்கள் பறவைகள் சரணாலயம்.

இங்கு ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் உணவு தேடியும் இனப்பெருக்கத்திற்காகவும் வந்து செல்வது வழக்கமாகும். அந்த வகையில் நடப்பாண்டு வேடந்தாங்கல் சீசன் தொடங்கியிருப்பதால் 6000-க்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன.

தொடர்மழையால் வேடந்தாங்கல் ஏரி நிரம்பியிருக்கும் சூழலில் அங்கு புலம் பெயர்ந்துள்ள பறவைகள் குளித்து கும்மாளமிடும் காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக அரிவாள் மூக்கன், மிளீர்உடர் அரிவாள் மூக்கன், பாம்புதாரா, நத்தை குத்தி நாரை, சாம்பல் நிற கொக்கு, கூழைக்கிடா, கரண்டிவாயன் உள்ளிட்ட பறவைகள் கண்டு ரசிக்கும் மக்கள் அதனை புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

சீசன் தொடங்கியதால் 6000-க்கும் அதிகமான பறவைகள் வேடந்தாங்கலில் முகாமிட்டுருப்பதாகவும் ஜனவரி மாதம் வரை கிட்டத்தட்ட ஒரு லட்சம் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்து செல்லும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: