சபரிமலை செல்ல இன்று விரதம் தொடக்கம்; துளசி மாலை, வேஷ்டிகள் இருமுடி பொருட்கள் குவிப்பு: கோயில்களில் மாலை அணிய ஏற்பாடு

சேலம்: ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்வதற்கான கார்த்திகை விரதம் இன்று தொடங்குகிறது. இதையொட்டி சேலம் கடைவீதிகளில் துளசி மணிமாலை, டாலர், காவி வேஷ்டி, இருமுடி பொருட்களின் விற்பனை களை கட்டியுள்ளது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகள் விமரிசையாக நடக்கும். இதற்காக ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1ம் தேதி முதல் 60 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடக்கும். இதில் பங்கேற்று ஐயப்பனை தரிசிப்பதற்காக பக்தர்கள், மாலை அணிந்து விரதம் இருப்பது வழக்கம்.  நடப்பாண்டு கார்த்திகை விரதம் இன்று (17ம் தேதி) தொடங்குகிறது.

இன்று முதல் ைத முதல் தேதி வரை, பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று வருவார்கள். இதையொட்டி சேலம் கடைவீதியில் காவி, கருப்பு, ஆரஞ்சு, நீலம் என்று வண்ணவேஷ்டிகள், துளசி மணிமாலை, ஸ்படிகமணி, ஐயப்பன் டாலர், இருமுடி பைகள், சந்தனம், ஜவ்வாது, விபதி, குங்குமம், இருமுடிக்கு தேவையான தேங்காய், பொரி, முந்திரி, திராட்சை, ஏலக்காய், பேரீட்சை, அச்சு வெல்லம், ஊதுபத்தி, நெய் உள்ளிட்டவைகளின் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை விரதம் தொடங்கும் பக்தர்கள், கடைகளில் ஆர்வத்துடன் இருமுடிக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

கார்த்திகை விரதம் தொடங்குவதையொட்டி இன்று சேலம் சுகவனேஸ்வரர் கோயில், ராஜகணபதி கோயில், சித்ேதஸ்வரா காளியம்மன் கோயில், அம்மாப்பேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய சுவாமி கோயில், சாஸ்தா நகர் ஐயப்பன் கோயில், டவுன் ரயில்வே ஸ்டேஷன் ஐயப்பன் கோயில், ஊத்துமலை முருகன் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள சிவன், அம்மன், விநாயகர், முருகன் கோயில்களில் ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குண்டுமல்லி கிலோ ரூ500

இன்று கார்த்திகை விரதம் தொடங்குவதையொட்டி சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் பூக்களின் விற்பனை களைகட்டியது. குண்டுமல்லி கிலோ ரூ500 என்றும், முல்லை ரூ300, ஜாதிமல்லி ரூ260, காக்கட்டான் ரூ120, கலர் காக்கட்டான் ரூ80, சம்பங்கி ரூ25, சாதா சம்பங்கி ரூ40, அரளி ரூ160, வெள்ளை அரளி ரூ160, மஞ்சள் அரளி ரூ160, செவ்வரளி ரூ180, ஐ.செவ்வரளி ரூ180, நந்தியாவட்டம் ரூ20, சி.நந்தியாவட்டம் ரூ20 என விற்பனை செய்யப்பட்டது.

Related Stories: