தென்னிந்திய அளவிலான விலை கண்காணிப்பு அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

சென்னை: தென்னிந்திய அளவிலான விலை கண்காணிப்பு மற்றும் சேகரிப்பு அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி சென்னையில் நேற்று நடந்தது. சென்னையில் நேற்று ஒன்றிய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு துறை மற்றும் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இணைந்து நடத்திய தென்னிந்திய அளவிலான விலை கண்காணிப்பு மற்றும் சேகரிப்பு அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன், தேசிய தகவல் மைய இயக்குநர் நடராஜன் மற்றும் ஒன்றிய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு துறை துணை இயக்குநர் சஞ்சய் கவுசிக் மற்றும்  தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச குடிமைப்பொருள் வழங்கல் துறை (விலை கண்காணிப்பு) அதிகாரிகள் கலந்து கொண்டனர். உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் துவக்க உரை நிகழ்த்தினார்.

இந்த திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறையில் அத்தியாவசிய பண்டங்களின் விலை விவரங்களை கைபேசி செயலி மூலம் பதிவு செய்து அனுப்புதல், விலை விவர பகுப்பாய்வு, அத்தியாவசிய பண்டங்களின் விலை விவரங்கள் சேகரிப்பில் நவீன முன்னெடுப்புகள் ஆகியவை குறித்து இந்திய அரசின் நுகர்வோர் விவகாரத்துறை அதிகாரிகளால் விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சார்ந்த 38 குடிமைப்பொருள் வழங்கல் துறை (விலை கண்காணிப்பு) அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: