சென்னை-அந்தமான் இடையே 18ம் தேதி வரை விமான சேவை ரத்து

மீனம்பாக்கம்: சென்னை-அந்தமானுக்கு இடையே இயங்கி வந்த 14 விமான சேவைகள் நேற்று முதல் 18ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை-அந்தமான் இடையே தினமும் 14 விமான சேவைகள் நடைபெற்று வருகின்றன. அந்தமான் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குவதால், நாள்தோறும் மேற்கண்ட 14 விமான சேவைகள் மூலமாக ஏராளமான பயணிகள் சென்று வருகின்றனர்.

இதற்கிடையே அந்தமானில் எப்போதும் மதியம் 3 மணிக்கு மேல் தரைக்காற்று வீசத் துவங்கும். இதனால் அங்கு விமானங்கள் தரையிறங்கவோ புறப்படவோ முடியாது. இதனால் அங்கு அதிகாலையில் இருந்து பிற்பகல் வரை மட்டுமே விமான சேவைகள் இயங்கும். தற்போது அந்தமானில் மோசமான வானிலை மற்றும் விமான நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக, கடந்த 1ம் தேதி முதல் 5ம் தேதிவரை விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இதன்பிறகு கடந்த 6ம் தேதி முதல் மீண்டும் விமான சேவைகள் துவங்கின.

இந்நிலையில், நேற்று (15ம் தேதி) முதல் மீண்டும் சென்னை-அந்தமானுக்கு இடையே 14 விமான சேவைகள் வரும் 18ம் தேதிவரை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் அந்தமானில் இருந்து இங்கு மருத்துவ சிகிச்சைக்கு வருபவர்கள் பெரிதும் அதிருப்தி அடைந்தனர். மேலும், இங்கிருந்து அந்தமானுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதிலும் சிக்கல் நிலவுகிறது.

சென்னை-அந்தமான் இடையே ஏற்கெனவே 4 நாட்கள் விமானசேவை ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விமான சேவைகள் ரத்து குறித்து பயணிகளுக்கு இந்திய விமானநிலைய ஆணையமோ, சென்னை விமானநிலைய அதிகாரிகளோ முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

Related Stories: