குஜராத் மோர்பி பாலம் பராமரிப்பு ஒப்பந்தம் குறித்து உயர்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியும் பாஜக அரசு மவுனம் காப்பது ஏன்?: ப.சிதம்பரம் கேள்வி

சென்னை: குஜராத் மோர்பி பாலம் பராமரிப்பு ஒப்பந்தம் குறித்து உயர்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியும் பாஜக அரசு மவுனம் காப்பது ஏன்? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். குஜராத் மோர்பி பகுதியில் உள்ள 150 ஆண்டுகால பழமையான தொங்குபாலம் கடந்த 30ம் தேதி அறுந்து விழுந்ததில் 135 பேர் உயிரிழந்தனர். பால பராமரிப்பு பணிகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில், அது தொடர்பான பொதுநல வழக்கை குஜராத் உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது 2008ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை பாலத்தை பராமரித்து நிர்வகிக்கும், ஒப்பந்தம் ஒரேவா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்ததை நீதிபதி சுட்டிக்காட்டினார். ஆனால் ஒப்பந்தம் காலாவதியான பிறகும் டெண்டர் கோராமல், மீண்டும் அதே நிறுவனம், ஒப்பந்தத்தை தொடர அனுமதித்து பெரும் தொகை வழங்கப்பட்டது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். 2020ம் ஆண்டு போடப்பட்ட ஒன்றரை பக்க ஒப்பந்தத்தில், எந்த நிபந்தனையும் இல்லை எனவும், பாலத்தின் உறுதி தன்மை குறித்து யார் சான்றளித்தது? எனவும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த ஒப்பந்த விவகாரத்தில் தனியார் நிறுவனத்திற்கு மாநில அரசு, தாராளம்  காட்டியதாக கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், உரிய பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம், நீதிமன்றம் தெரிவித்த கண்டனம், ஆளும் பாஜக அரசுக்கு கிடைத்த வெகுமதி என விமர்சித்துள்ளார். மோர்பி பாலம் விபத்து மூலம் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மாநில அரசின் அலட்சியப்போக்கு அம்பலமாகியுள்ளது.

பாலம் விபத்தில் குஜராத் உயர்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளால் மாநில அரசை அம்பலப்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் பிறகு அமைச்சரவையில் தொடர நகர்புறத்துறை அமைச்சருக்கு என்ன உரிமை இருக்கிறது. மாநில அரசின் சட்டவிரோத நடவடிக்கைகளை நீதிமன்றம் அம்பலப்படுத்தியும், மன்னிப்போ, துறைசார் அமைச்சர் நீக்கமோ என எந்த நடவடிக்கையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: