கோட்டூர் ரோட்டில் ரூ.1.88 கோடியில் அறிவுசார் மைய கட்டுமான பணி தீவிரம்: விரைந்து முடிக்க நடவடிக்கை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் ரூ.1.88 கோடியில் அறிவுசார் மையம் கட்டுமான பணி தீவிரமாக நடக்கிறது. அதனை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி நகராட்சியில் ஒரு சில இடத்தில் மட்டுமே நூலக செயல்பாடு உள்ளது. இருப்பினும்,  நகராட்சி பகுதியிலேயே நூலகம், பயிற்சி பட்டறையுடன் அடங்கிய ‘அறிவுசார் மையம்’ அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இதற்கான இடம் தேர்வு செய்யும் பணி சுமார் 7 மாதத்திற்கு முன்பு நடைபெற்றது.

 இதில், கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு சுமார் 10 சென்ட் நிலப்பரப்பில் ‘கலைஞர் புறநகர் மேம்பாட்டு’ திட்டத்தின்கீழ் அறிவு சார் மையம் பிரமாண்ட நூலகத்துடன் அமைக்க, ரூ.1.88 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படது. இதையடுத்து, சில மாதத்திற்கு முன்பு கோவையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் துவக்கி வைத்தார்.

 தற்போது, கான்கிரீட் தூண்கள் எழுப்பும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணியை நகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது கண்காணித்து துரிதப்படுத்துகின்றனர். இதில் நேற்று முன்தினம், அறிவு சார் மைய புதிய கட்டிட கட்டுமான பணியை, நகர்மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

 இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்:

பொள்ளாச்சி பகுதியில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு வசதியாக அறிவு சார் மையம் அமைக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் சுமார் 7 ஆயிரம்  வகையான புத்தகங்கள் வைக்கப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி வேலை வாய்ப்பு சம்பந்தமான பயிற்சி அளிப்போருக்கு, தகுதியின் அடிப்படையில் அனுமதி அளிக்கப்படுகிறது. பல்வேறு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பறையால், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பலரும் பயன்பெறுவார்கள்.

 அதுமட்டுமின்றி பல்வேறு தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், தனியாக படிப்பதற்கான அறையும் உள்ளடங்கும். இதன் மூலம், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், தங்களின் அறிவுத்திறமையை மேம்படுத்த வசதியாக, அறிவு சார் மையம் இருக்கும். கட்டுமான பணியை விரைந்து நிறைவு செய்ய தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Related Stories: