மதுரவாயல் அருகே பைக் மீது லாரி மோதி ஆயுதப்படை காவலர் பலி: லாரி டிரைவர் கைது

பூந்தமல்லி: மதுரவாயல் அருகே, பைக் மீது லாரி மோதியதில் காவலர் ஒருவர் பரிதாபமாக பலியானார். இதுதொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்துக்கு  காரணமான லாரி டிரைவரை கைது செய்து விசாரிக்கின்றனர். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெய்னுல்லாபுதின் (28). இவர் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஜாஸ்மின். நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியை சொந்த ஊரில் விட்டுவிட்டு, சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, வேலையை முடித்து விட்டு பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல் ரேஷன் கடை பஸ் நிறுத்தம் அருகே சிக்னலில் நின்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் அசுர வேகத்தில் வந்த டேங்கர் லாரி  பிரேக் பிடிக்காமல் திடீரென ஜெய்னுல்லாபுதின் பைக் மீது மோதியது. இதில்,  நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

தகவல் அறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெய்னுல்லாபுதின் உடலை மீட்டு,  பிரேத  பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்திற்கு காரணமான லாரி டிரைவர் கணேசன் (62), என்பவரை  கைது செய்து விசாரித்து வருகின்றனர். நிறைமாத கர்ப்பிணியாக மனைவி இருக்கும் நிலையில், அவரது கணவர் சாலை விபத்தில் பலியான சம்பவம், அவரது உறவினர் மற்றும் காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.   

Related Stories: