800 கோடியை எட்டியது உலக மக்கள் தொகை: ஐநாவின் புதிய மக்கள் தொகை மதிப்பீட்டில் தகவல்..!

லண்டன்: உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகை 800 கோடியை எட்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புதிய மக்கள் தொகை மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 11ம் தேதி உலக மக்கள் தொகை தினத்தில் வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தில் நவம்பர் 15ம் தேதி உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தற்போது 800 கோடி என்ற மக்கள் தொகை எண்ணிக்கையை பூமி எட்டியுள்ளது. 2050ம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் பாதிக்கு மேல் இந்தியா, பாகிஸ்தான், காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், தான்சானியா உள்ளிட்ட நாடுகள் கொண்டிருக்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகை 700 கோடியில் இருந்து 800 கோடியாக அதிகரிக்க 12 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அது 900 கோடியை எட்டுவதற்கு மேலும் 15 ஆண்டுகள் பிடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற சீனாவின் சாதனையை இந்தியா ஒரே ஆண்டில் முறியடிக்கும் என்றும் ஐநா கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டுவது பூமியை காக்கும் நமது கூட்டு பொறுப்பை நினைவூட்டும் என்று விமர்ச்சித்துள்ள ஐநா பொதுச்செயலாளர் குட்டரஸ், நமது பொறுப்புகளில் எங்கே பின்தங்கி இருக்கிறோம் என்று சிந்திப்பதற்கான நேரம் இது என்றும் கூறியுள்ளார்.

Related Stories: