ஒரே நாளில் குரூப் 1 தேர்வு, பல்கலைக்கழக தேர்வுகள்: n எதில் பங்கேற்பது என மாணவர்கள் குழப்பம் : தேர்வு அட்டவணையை மாற்ற கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் குரூப் 1 தேர்வு மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் வருவதால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். எந்த தேர்வை எழுதுவது என்று திணறி வருகின்றனர். பல்கலைக்கழக தேர்வு அட்டவணையை மாற்ற ேவண்டும் என மாணவர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கே மாணவர்கள் அதிக முக்கியத்துவம் தருவது வழக்கம். அந்த வகையில் நவம்பர் 19ம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் குரூப் 1 எனப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 1 நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் ஏராளமானோர் எழுத உள்ளனர். இதற்காக பல மாதங்களாக தங்களை தயார் படுத்திக் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 1 தேர்வுகள் நடைபெறும் அதே நாளில் பல்கலைக்கழகங்கள் சார்பில் முதுகலை பட்டத்திற்கான பல்வேறு தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக எம்ஏ, எம்காம், எம்எஸ்சி உள்ளிட்ட முதுகலை படிப்பிற்கான 3வது செமஸ்டர் தேர்வுகள் அதே நாளில் நடைபெற உள்ளது. இதனால், முதுகலை தேர்வு எழுதும் அதே நாளில் குரூப் 1 தேர்வுகளும் வருவதால், ஏதாவது ஒரு தேர்வை ரத்து செய்துவிட்டு மற்றொரு தேர்வை எழுத வேண்டிய கட்டாயத்தில் மாணவ, மாணவிகள் உள்ளனர். பெரும்பாலானோர் முதுகலை பட்டப்படிப்பு தேர்வை ரத்து செய்துவிட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வுகளை எழுத உள்ளதாக கூறியுள்ளனர்.

முதுகலை தேர்வு விடுபட்டால் மீண்டும் அரியர் எழுதிக் கொள்ளலாம். ஆனால் தமிழ்நாடு குரூப் 1 தேர்வு விடுபட்டால் மீண்டும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். அரசு வேலைக்கு முக்கியத்துவம் தரும் வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கே முக்கியத்துவம் தருவார்கள். மாணவர்கள் மட்டும் இல்லாமல் கல்லூரி செமஸ்டர் தேர்வை கண்காணிக்க உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் அவர்களில் பல பேர் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதனால் அவர்களும் குழப்பத்தில் உள்ளனர். எனவே, ஒரே நாளில் 2 தேர்வுகளில் ஒன்றை மட்டுமே பல்கலை மற்றும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகங்கள் பேசி நடத்திட வேண்டும் என்று மாணவர்களும், உதவி பேராசிரியர்களுக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: