தனியார் கருத்தரிப்பு மைய நிறுவனர் மீது பெண் மருத்துவர் கொடுத்த புகார் மீது மீண்டும் விசாரணை: சிபிசிஐடி போலீசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னையில் தனியார் கருத்தரிப்பு மருத்துவமனை நிறுவனர் மீது பெண் மருத்துவர் அளித்த புகார் குறித்து மீண்டும் விசாரணை நடத்துமாறு சிபிசிஐடிக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கருத்தரிப்பு மற்றும் ஆராய்ச்சி மருத்துவ மையம் நடத்தி வரும் டாக்டர் தாமஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், என்னிடம் வேலை பார்த்த டாக்டர் ரம்யா என்பவர், எனது மருத்துவமனைக்கு எதிராக செயல்பட்டதால் அவரை கடந்த 2017ம் ஆண்டு பணி நீக்கம் செய்தேன். பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் மருத்துவர் போட்டி கருத்தரிப்பு மையத்தை உருவாக்கினார்.

மேலும், பெண் மருத்துவரை நான் பயங்கர ஆயுதங்களால் தாக்கியதாக அவர் கடந்த 2017 அக்டோபர் மாதம்  அளித்த புகாரில் செம்பியம் போலீசார் என் மீதும், ஊழியர்கள் மீதும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். மேலும், 2017 ஆண்டு நவம்பர் மாதம் டாக்டர் ரம்யாவின் சகோதரி (தங்கை) அளித்த புகார் மீது மற்றொரு கிரிமினல் வழக்கு என் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு கிரிமினல் வழக்குகளின் அடிப்படையில் என்னை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் 2017 டிசம்பரில்  ரத்து செய்தது. எனவே, எனக்கு எதிராக செம்பியம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு சென்னை மகளிர் நீதிமன்றம் மற்றும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை ரத்து செய்ய வேண்டும். செம்பியம் காவல் நிலையத்தில் உள்ள புகாரின் பின்னணியில் உண்மையைக் கண்டறியும் வகையில் சிபிசிஐடி உயர் அதிகாரிகள் கண்காணிப்பில் ஆய்வாளர்கள் அந்தஸ்து குறையாத அதிகாரியை கொண்டு மீண்டும் உரிய விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி இருந்தார்.

இந்த வழக்கு  நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரருக்கு எதிராக சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையை ரத்து செய்தும், செம்பியம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியும் உத்தரவிட்டார். சிபிசிஐடியில் ஆய்வாளர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை நியமித்து இந்த வழக்கின் உண்மை நிலை குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

Related Stories: