அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழக தொல்லியல் ஆய்வு குறித்து நாளை மறுநாள் சொற்பொழிவு

சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வரும் 15ம் தேதி தமிழக தொல்லியல் ஆய்வுகளை முன்வைத்து சொற்பொழிவு நடைபெற உள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தெற்காசியாவிலேயே மிகவும் பழமையான ஆவணக் காப்பகமாக தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை விளங்குகிறது. மாதந்தோறும் அறக்கட்டளை செற்பொழிவுகள் நடந்து வந்தன. சில ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நிகழ்வு இப்போது மீண்டும் புத்துயிர் பெற்று நடைபெற உள்ளது.

வரும் 15ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக மாநாட்டு அரங்கத்தில் டாக்டர் பழனி நி.பெரியசாமி அறக்கட்டளையின் சொற்பொழிவு நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் பொன்முடி தலைமையுரை ஆற்றுகிறார். தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு “பின்நகரும் காலம் - தமிழக தொல்லியல் ஆய்வுகளை முன்வைத்து” என்னும் தலைப்பில் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்த்துவார். உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், முன்னிலை வகிப்பார். நிகழ்ச்சியில் தமிழியல் ஆய்வு மாணவர்களும், பேராசிரியர்களும் விழாவுக்கு வந்து சிறப்பிக்குமாறு தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை ஆணையர் பிரகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: