பாபநாசம் மலை வழிச்சாலையில் திடீர் மண் சரிவு: நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைப்பு பணியில் தீவிரம்

விகேபுரம்: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை காரணமாக பாபநாசம் மலை வழிச்சாலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் தற்காலிக சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக பாபநாசம் மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைப்பகுதியில் உள்ள சாலையில் மழை நீர் கரை புரண்டு ஓடுகிறது.

இதனால், பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கும், பாபநாசம் கீழ் அணைக்கும் இடைப்பட்ட சாலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் மண் சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மணல் மூடைகளை அடுக்கி வைத்து தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சாலை வழியாகத்தான் சேர்வலாறு செல்பவர்களும், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கும் சென்று வருகின்றனர்.

அதே போன்று மலைப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, பொதுபோக்குவரத்துக்கு தங்கு தடையின்றி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நெடுஞ்சாலைத்துறையினர் இந்த சாலையை நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: