நீண்ட காலமாக கிடப்பில் உள்ள வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ரயில்வே அமைச்சருக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி கடிதம்

சென்னை: நீண்ட காலமாக கிடப்பில் உள்ள வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் விரிவாக்க திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு, ஒன்றிய ரயில்வே அமைச்சருக்கு திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு நேற்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வேளச்சேரி ரயில் நிலையத்திலிருந்து பரங்கிமலை ரயில் நிலையம் வரை உள்ள 5 கிலோ மீட்டர் தூரத்தை இணைக்கும் இத்திட்டத்தை தெற்கு ரயில்வே கடந்த 2008ம் ஆண்டு தொடங்கியது. பல ஆண்டுகள் கடந்தும் இத்திட்டத்தின் விரிவாக்க இறுதிப் பணிகள் பல்வேறு காரணங்களால் தடைபட்டுள்ளன. மேலும், ஜீவா நகர் என்ற இடத்திலிருந்து பரங்கிமலை ரயில் நிலையம் இடையிலான 500 மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை அமைக்கப்பட முடியாமல் திட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

சென்னையில் வேளச்சேரி ரயில் நிலையம் - பரங்கிமலை ரயில் நிலையம் இடையிலான 5 கி.மீ. தூர பறக்கும் ரயில் திட்ட விரிவாக்கம், புறநகர் ரயில் போக்குவரத்தில் மிக முக்கிய இடம்பெற்றுள்ளது. பறக்கும் ரயில் திட்டம், புறநகர் ரயில்வே, சென்னை மெட்ரோ ரயில்வே, தெற்கு ரயில்வே ஆகிய நான்கு ரயில்வே போக்குவரத்துகளை இணைப்பதாக அமைந்துள்ளது. வேளச்சேரி ரயில் நிலையம் - பரங்கிமலை ரயில் நிலையம் இணைப்பு திட்டத்தை நிறைவடையச் செய்வதன் மூலம் தென்சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைகளுக்கு பெருமளவில் தீர்வு காண முடியும்.

இந்த திட்டம் மூலமாக இப்பகுதியில் கரியமில வாயு மூலம் காற்று மாசுபடுவதைக் குறைக்க வழி ஏற்படும். பொதுமக்களும் தங்களுடைய சொந்த வாகனங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக ரயில் பயணத்தை மேற்கொள்ள முன்வருவார்கள் என்பதையும் தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.அதேபோல், தென் தமிழகத்திலிருந்து வரும் ரயில் பயணிகள் வசதியுடன் எவ்வித இன்னலும் இன்றி சென்னையின் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் தாங்கள் சென்றடைய வேண்டிய இடங்களுக்கு மிகுந்த இடர்பாடுகள் இன்றி சென்று திரும்ப பேருதவியாக அமையும். எனவே, வேளச்சேரி - பரங்கிமலை ரயில் நிலையம் இடையிலான 500 மீட்டர் தூர இறுதி கட்டப் பணிகளை விரைந்து முடிக்க இது விஷயத்தில் தாங்கள் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories: