மறுஉத்தரவு வரும் வரை ஞானவாபி மசூதி சிவலிங்கத்துக்கு பாதுகாப்பை தொடர வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘ஞானவாபி மசூதியில் உள்ள சிவலிங்கத்திற்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு, மறுஉத்தரவு வரும் வரை தொடர வேண்டும்,’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது. இந்த மசூதியின் வெளிப்புறச் சுவரில் உள்ள இந்து கடவுள்களின் சிலையை ஆண்டு முழுவதும் வழிபாடு செய்ய அனுமதிக்க கோரி 5 பெண்கள். வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், மசூதியை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு நியமித்தது. இக்குழு மசூதியை ஆய்வு செய்தபோது, மசூதிக்குள் ஒரு சிவலிங்கம் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த ஆய்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் மசூதி நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆய்வு செய்யப்பட்ட இடத்தில் உள்ள சிவலிங்கத்துக்கு முழு பாதுகாப்பு தரும்படி கடந்த மே 17ம் தேதி உத்தரவிட்டது. இந்த பாதுகாப்பு உத்தரவு இன்றுடன் முடியும் நிலையில், இந்த பாதுகாப்பை நீடிக்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் இந்து அமைப்புகள் சார்பில் வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சூர்ய காந்த், பிஎஸ் நரசிம்மா அமர்வில் நேற்று இது விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘சிவலிங்கத்துக்கு அளித்து வரும் பாதுகாப்பை மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் தொடர வேண்டும், இதை மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்,’ என உத்தரவிட்டது.

Related Stories: