10% இடஒதுக்கீடு விவகாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பையடுத்து, எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் தலைமை செயலகத்தில் நடக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து கடந்த 8ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினும் தலைமை செயலகத்தில், மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு அளித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி கருத்து கேட்க முடிவு செய்தார். அதன்படி கடந்த 8ம் தேதியே, அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தனியே கடிதம் எழுதினார். இந்த கூட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற கட்சியின் சார்பாக இரண்டு பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று காலை 10.30 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவை பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக, பாஜ, புரட்சி பாரதம் கட்சிகள் பங்கேற்பது குறித்து இன்று காலைதான் தெரியவரும்.இன்று நடைபெறும் கூட்டத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து முடிவு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

Related Stories: