பரம்பிக்குளம் அணையில் புதிய ஷட்டர் அமைக்கும் பணி தீவிரம்: பொதுப்பணித்துறையினர் கண்காணிப்பு

ஆனைமலை: பரம்பிக்குளம் அணையில் புதிய ஷட்டர் அமைக்கும் பணியை பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த  பாரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்திற்குட்பட்ட(பிஏபி) கேரள எல்லையில் அமைந்துள்ள 72அடி கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணையில், தண்ணீரின் அழுத்தம் தாங்காமல் கடந்த செப்டம்பர் 21ம் தேதி அதிகாலை அணையில் உள்ள இரண்டாவது மெயின் ஷட்டர் உடைந்தது. இதன் காரணமாக, ஆயிரகணக்கான கன அடி தண்ணீர் வெளியேறியது. இதையடுத்து, பரம்பிக்குளம் அணையில் போர்கால அடிப்படையில் புதிய ஷட்டர் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ரூ.7.20 கோடியில் இரும்பாலான புதிய ஷட்டர் அமைக்கும் பணி 3 வாரத்துக்கு முன்பு துவங்கப்பட்டது.

திருச்சியிலிருந்து  கொண்டுவரப்பட்ட ராட்சத இரும்பு தளவாட பொருட்களை கொண்டு, 27அடி உயரம் 45அடி அகலத்தில் புதிய ஷட்டர் அமைக்கும் பணியை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். கடந்த வாரம் முதல், அணையின் இரண்டாவது கண் பகுதியில், ராட்சத கிரேன் மூலம் ஷட்டர் பொறுத்தும் பணியும், இணைப்புக்கு வெல்டிங் அடிக்கும் பணியும் இரவு பகலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியில் சுமார் 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி இன்னும் 2 வாரங்களில் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: