கத்தியால் உடலை வெட்டி காயப்படுத்திக் கொண்டு நீதிபதி வீட்டில் ‘பியூன்’ தீக்குளித்து தற்கொலை: ராஜஸ்தானில் அதிர்ச்சி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நீதிபதி ஒருவரின் வீட்டில் அவரது பியூன் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சிங் புரா கோர் அடுத்த லால்வாஸ் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் மெஹ்ரா (34). கடந்த 2011ம் ஆண்டு அவரது தந்தை மரணம் அடைந்ததால், கருணை அடிப்படையில் சுபாஷ் மெஹ்ராவுக்கு நீதிமன்ற பியூன் பணி கிடைத்தது. மாவட்ட நீதிபதி கே.எஸ்.சலனா என்பவரின் நீதிமன்ற பியூனாக சுபாஷ் மெஹ்ரா பணியாற்றி வந்தார். இந்நிலையில் கமலா நேரு நகரில் உள்ள நீதிபதி வீட்டின் மொட்டை மாடியில் சுபாஷ் மெஹ்ரா, தனது உடலை எளிதில் தீப்பற்றக் கூடிய எரிபொருளை பயன்படுத்தி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் சுபாஷ் மெஹ்ராவின் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து பாங்க்ரோட்டா போலீஸ் அதிகாரி ஸ்ரீமோகன் மீனா கூறுகையில், ‘நீதிபதியின் வீட்டிற்கு தாமதமாக வேலைக்கு வரும்போதெல்லாம், நீதிபதியின் வீட்டு மொட்டை மாடியில் உள்ள ஒரு அறையில் சுபாஷ் மெஹ்ரா தங்கிக் கொள்வார். அதன்படி புதன்கிழமை இரவு 9.30 மணியளவில், மொட்டை மாடியில் உள்ள அறையில் உள்தாழிட்டு தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்த நாள் காலை 8.30 மணியளவில், நீதிபதி வேலைக்குச் செல்ல தயாராக இருந்தார்; அப்போது அவர் தனது பியூன் மெஹ்ராவை அழைத்தார். ஆனால், அவர் எவ்வித பதிலும் அளிக்காததால் மேல்மாடிக்கு சென்று அவர் தங்கியிருந்த அறைக்கு சென்றார். அறையின் கதவு பூட்டப்பட்டிருந்ததால், ஜன்னல் வழியாக பார்த்த போது உடல் கருகிய நிலையில் ​​மெஹ்ராவின் சடலம் இருந்தது.

அதையடுத்து நீதிபதி போலீசுக்கு தகவல் அளித்தார். நாங்கள் கருகிய உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறோம். முதற்கட்ட விசாரணையில் இறந்த சுபாஷ் மெஹ்ராவின் உடலில் கத்திக் காயங்கள் இருந்தன. அவர் தன்னைத் தானே வெட்டிக் கொண்டு காயப்படுத்திக் கொண்டார். பின்னர் எரியக்கூடிய ரசாயனத்தைப் பயன்படுத்தி தீ வைத்துக் கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணங்கள் தெரியவில்லை. இதுவரை திருமணம் செய்து கொள்ளாத அவர், குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவில் இல்லை. இவ்வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

Related Stories: