இந்திய பொருளாதாரத்தில் கால்நடை உற்பத்தி பொருட்களின் பங்கு 30 சதவீதமாக உயர்ந்துள்ளது: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

பெரம்பூர்: சென்னை வெப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் 31வது தேசிய ஒட்டுண்ணியல் துறை கூட்டமைப்பு மாநாடு துவக்க விழா நேற்று நடந்தது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் கால்நடை ஒட்டுண்ணி நோய்களை கண்டறிவதிலும், அதனை கட்டுப்படுத்துவதிலும் புதிய யுத்திகள். மேம்படுத்தப்பட்ட தடுப்பு மருந்துகள் ஆகிய குறித்து விவாதிக்கப்படுகிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் மாநாட்டை துவக்கி வைத்து, மாநாட்டு மலரை வெளியிட்டார்.

அப்போது, அவர் பேசுகையில், இந்திய கால்நடை உற்பத்தியின் வளர்ச்சி மற்றும் இந்திய பொருளாதாரத்தில் கால்நடை உற்பத்தி பொருட்களின் பங்கு கடந்த 5 வருடங்களில் 24 சதவீதத்திலிருந்து, 30 சதவீதமாக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும், பொருளாதார வளர்ச்சியில் பால் உற்பத்தி ஒரு தனி பெரும் உற்பத்தி பொருளாக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். கால்நடை மருத்துவ கல்வியின் தேசிய அமைப்பின் தலைவர் டாக்டர் டிவிஆர் பிரகாஷ் ராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்திய ஒட்டுண்ணியல் துறை கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் சுக்பீர் கவுர் மற்றும் செயலாளர் டாக்டர் ஜிதேந்திர குமார் சக்சேனா ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியினை கால்நடை நலக் கல்வி இயக்குனர் பேராசிரியர் சவுந்தர்ராஜன் ஒருங்கிணைத்து நடத்தினார். கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள் மற்றும் பலர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

Related Stories: