புதிதாக விண்ணப்பிக்கும் அட்டைதாரர்களுக்கும் ஆவின் ஆரஞ்சு பால் ₹46க்கு விற்பனை: பால்வளத்துறை ஆணையர் சுப்பையன் தகவல்

சென்னை: புதிதாக விண்ணப்பிக்கும் அட்டைதாரர்களுக்கும் ஆவின் ஆரஞ்சு பால் ₹46க்கு விற்பனை செய்யப்படும் என பால்வளத்துறை ஆணையர் சுப்பையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வணிக ரீதியாக பயன்படுத்தும் ஆரஞ்சு பால் விற்பனை விலை ஒரு லிட்டர் ₹48ல் இருந்து ₹60வாக உயர்த்தப்பட்டது. அதன்படி, 500 மி.லி. ஆரஞ்சு பால் பாக்கெட் ₹30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிற பால் பாக்கெட் புதிய விலையில் ஆவின் பாலகங்களுக்கும், கடைகளுக்கும் விற்பனைக்கு வந்தது.

ஆனால், அவற்றை வாங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டவில்லை  என செய்திகள் வெளியானது. இதுகுறித்து, பால்வளத்துறை ஆணையர் சுப்பையன் கூறியதாவது: ஆவின் பால் பாக்கெட்டுகளை 11 லட்சம் பேர் வாங்கி வருகின்றனர். ஆனால், அதே சமயம் பால் அட்டை வைத்திருக்கும் ஒரு லட்சம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ₹46க்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் ஓட்டல்கள், டீ கடைகளுக்கு தான் அதிகமாக வாங்கப்படுகிறது. இதனால் இந்த விலை ஏற்றம் காரணமாக பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாயப்பு இல்லை.

வணிக ரீதியாக வாங்கும் நபர்களுக்கு மட்டுமே இந்த விலை ஏற்றம்.  மேலும், பால் விலை ஏற்றத்திற்கு பிறகு ஆரஞ்சு பால் பாக்கெட் மாதாந்திர அட்டை வைத்து நாள் ஒன்றுக்கு ₹60 ஆயிரம் முதல் ₹1 லட்சம் வரையும், வணிக ரீதியாகவும், சில்லரை  விற்பனையாக ₹7.4 லட்சம் பணம் செலுத்தியும் பால் விற்பனையாகியுள்ளது. பொதுவாக, அட்டைதாரர்கள் வாங்கும் பால் விற்பனையில் எந்தவித மாற்றமும் இன்றி எப்போதும் போன்றே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: