வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி: 18 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை.! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் உட்பட 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

சென்னை: வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது, இன்று தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்பதால் வரும் 13ம் தேதி வரை தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 10 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளதை அடுத்து, வங்கக் கடலில் நேற்று முன்தினம் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. அது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டது. அதன் காரணமாக, தென்தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், வடதமிழகத்தில் சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

இந்நிலையில், அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழக மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று தமிழக கடலோரப் பகுதிக்கு வந்து நன்கமைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று எதிர்பார்ப்பதால், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்,  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று  அதி கனமழை பெய்யும். சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர்,  நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். இதுதவிர சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில்  கனமழை  பெய்யும்.

12ம் தேதி நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கன மழையும், கோவை, திருப்பூர், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை  பெய்யும். 13ம் தேதி 9 மாவட்டங்களில் அதிக கனமழையும்,  19 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் வாய்ப்புள்ளது. இதே நிலை 14ம் தேதி வரையும் நீடிக்கும். இந்நிலையில், சென்னையில்  இன்றும், நாளையும் சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிக கனமழையும் பெய்யும் வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப் பகுதிகள், தென் மேற்கு மற்றும்  அதை ஒட்டிய  மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும்  தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் 12ம் தேதி (நாளை) வரை சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும். 13, 14ம் தேதிகளில் லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகள், கேரளா,  தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகள் ஆகியவற்றில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மேற்கண்ட இடங்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளதால், அந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மழையின் தீவிரத்தின் பேரில் அந்தந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு தெரிவித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கனமழை பெய்யும் மாவட்டங்களில் அரசு நிர்வாகங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஊழியர்கள் பணிக்கு வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் அனைத்து வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு வீரர்கள், போலீசார், வருவாய்துறையினரும் தயார்நிலையில் உள்ளனர்.இதற்கிடையில், அதி கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: