தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீர் தேங்கினால் தகவலை வாட்ஸ்அப்பில் தெரிவிக்கலாம்: மேயர் ஜெகன்பெரியசாமி அறிவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிக்கிடக்கும் மழைநீர் குறித்த தகவலை 73977 31065 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மக்கள் நலனை கருத்தில்கொண்டு புதிதாக வெளியிடப்பட்டுள்ள 73977 31065 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு பொதுமக்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் தங்கள் பகுதியிலுள்ள குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் தேங்கிக் கிடக்கும் மழைநீர் குறித்த தகவலை புகைப்படத்துடன் 24 மணி நேரமும் தெரிவிக்கலாம்.

தகவல் கிடைக்கப்பெற்றவுடன் சம்பவ இடத்திற்கு மாநகராட்சி பணியாளர்கள் விரைந்துவந்து மழைநீர் அகற்றும் பணிகளை மேற்கொள்வார்கள். அப்பகுதிகளிலுள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் சாக்கடை கால்வாய்களிலுள்ள அடைப்புகளை துரிதமாக சரிசெய்தும் கொடுக்கப்படும். தேவைப்படும் பட்சத்தில் மாநகராட்சியின் கழிவுநீர் வாகனங்கள் மூலமாகவும் தேங்கி கிடக்கும் மழைநீர் அகற்றப்படும். பொதுவான பகுதிகள், குடியிருப்புகள் மற்றும் சாலைகள், தெருக்கள் போன்ற இடங்களில் தேங்கி கிடக்கும் மழைநீர் குறித்த தகவலை மட்டுமே தெரிவிக்க வேண்டும்.

தனிநபர்களுக்குரிய காலியிடங்கள் மற்றும் தனிநபர் வீடுகளில் தேங்கி கிடக்கும் மழைநீர் போன்ற தேவையில்லாத தகவல்களை தவிர்க்க வேண்டும். தனிநபர் காலியிடங்கள், வீட்டுமனைகள், மைதானங்கள் போன்றவற்றில் தேங்கி கிடக்கும் மழைநீர் பொதுசுகாதாரத்திற்கு கேடு விளைவித்து வருவதால் இவற்றை சம்பந்தப்பட்டவர்களே  அகற்றுவதற்கான பணிகளை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Related Stories: