பேரளையூர் ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி: புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்க கோரிக்கை

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள பேரளையூர் ஊராட்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 30 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைந்துள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு 30 ஆண்டுகளான நிலையில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுவதும் சிமெண்ட் தூண்கள் சேதம் அடைந்தும் இருப்பதால் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் இருந்து வருகின்றனர்.

மேலும் அப்போதைய மக்கள் தொகை ஏற்ப 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஆனால் தற்போது உள்ள மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் அதிலிருந்து வழங்கப்படும் குடிநீர் பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. மேலும் அருகில் கோயில், பள்ளிக் கூடங்கள் உள்ள சூழ்நிலையில்  பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில்  அங்கு வந்து செல்கின்றனர் இதன் காரணமாக மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து இடிந்து விழும் சிமெண்ட் காரைகள் பொதுமக்கள் மீது விழுந்து விடும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இடித்து அகற்றி விட்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Related Stories: