பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து பயிற்சி மருத்துவர் படுகாயம்: கண்டமங்கலம் போலீசார் விசாரணை

கண்டமங்கலம்: விழுப்புரம் புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே புதிய மேம்பால பணி தற்போது பல கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது.  சாலை விரிவாக்க பணி வில்லியனூரில் தொடங்கி பள்ளித்தென்னல் பகுதி வரை தற்போது நடைபெற்று வருகிறது. பள்ளித்தென்னல் பகுதியில் சிறிய பாலம் கட்டும்படி நடைபெற்று வருகிறது.  இதற்காக சாலை அருகே ஆழமாக பள்ளம் எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை அரியூரில்  உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு எம்பிபிஎஸ் படிக்கும் கல்லூரி மாணவர் இரவு பயிற்சி மருத்துவர் பணியை முடித்துவிட்டு தனது காரில் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.  

அப்பொழுது எதிர்பாராத விதமாக பாலம் கட்டுவதற்கு தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் கார் நிலை தடுமாறி விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பயிற்சி மருத்துவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.  இது குறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பள்ளத்துக்குள் விழுந்து கிடந்த காரை அப்புறப்படுத்தினர். மருத்துவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.  இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: