சென்னையிலேயே அதிகபட்சமாக 35 மீட்டர் ஆழத்தில் அமைகிறது மயிலாப்பூர் மெட்ரோ நிலையம்: மூன்று தளங்களாக கட்டப்படுகிறது; மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தகவல்

சென்னை: சென்னையிலேயே மிகவும் ஆழமான மெட்ரோ ரயில் நிலையமாக மயிலாப்பூர் அமையும். அதாவது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தைவிட அதிகபட்சமாக 35 மீட்டர் ஆழத்தில் அமைகிறது என மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் மாதவரம் - சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி, மாதவரம்- சோழிங்கநல்லூர் வரை 3  வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்படும்.  பயணிகளின் வசதிக்காக விம்கோ நகர்- விமான நிலையம் வழித்தடத்தை நீல நிறம் என்றும், சென்னை சென்ட்ரல்- விமான நிலையம் வரை உள்ள வழிதடத்தை பச்சை நிறம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மூன்றாவது கட்டமாக மாதவரம் பால்பண்ணை- சிப்காட் வழித்தம் ஊதா நிறம் என்றும், கலங்கரை விளக்கம்-  பூவிருந்தவல்லி வரையிலான வழித்தடம் காவி நிறம் என்றும், மாதவரம் பால் பண்ணை-சோழிங்கநல்லூர் வழித்தடம் சிவப்பு நிறம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் அமைந்துள்ள ரயில் நிலையங்களிலேயே மயிலாப்பூரில் அமைய உள்ள மெட்ரோ ரயில் நிலையம் மிகவும் ஆழமானது. அதாவது 35 மீட்டர் (115 அடி) ஆழத்தில் அமைய உள்ளது. ஆனால் முக்கியமான சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தின் ஆழமே 30 மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் நிலையம் ‘T’ வடிவில் உருவாக்கப்படுகிறது.

மயிலாப்பூர் மெட்ரோ ரயில் நிலையம், 4 நிலைகளில் ஒன்றின் மேல் ஒன்றாக 4 சுரங்க வழிப்பாதைகள் கொண்டதாக கட்டப்படுகிறது. இதன் மொத்த பரப்பு 4,854.4 சதுர அடி. மேலும், மாதவரம் - சிப்காட் டிக்கெட் கவுன்டர் முதல் நடைமேடையிலும் லைட் ஹவுஸ் - பூந்தமல்லி இருவழித்தட நடைமேடை, மாதவரம் - சிப்காட் இரண்டாவது நடைமேடை என 4 தளங்காளக அமைகிறது. இந்த ரயில் நிலையத்தில் மாதவரம் - சிப்காட் செல்லும் வழித்தடம் 17 மீட்டர் ஆழத்திலும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி செல்லும் வழித்தடம் 24 மீட்டர் ஆழத்திலும் வரவுள்ளது. இந்த ரயில் நிலையத்திற்குள் செல்வதற்கு 5 நுழைவாயில்கள் இடம்பெறவுள்ளன. லஸ் சந்திப்பு பகுதிக்கு அடியில் அமைவதால் லஸ் பேருந்து நிலையத்திற்கு எளிதில் சென்றடையலாம்.

இதுகுறித்து மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், மயிலாப்பூரில் போதிய நிலம் மற்றும் சாலை அகலம் இல்லாத காரணத்தால் ஆழமான ரயில் நிலையமாக கட்டப்பட உள்ளது. இந்த நிலையத்தில் 4 சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் வெவ்வேறு நிலைகளில் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும் லஸ் சந்திப்பின் கீழ் கட்டப்படுவதால் முக்கிய ஜங்ஷன் நிலையமாக மயிலாப்பூர் மெட்ரோ நிலையம் திகழும். இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என்றார்.

மயிலாப்பூர் மெட்ரோ ரயில் நிலையம்

முதல் தளம்    17மீ (55 அடி)    மாதவரம்-சிறுசேரி சிப்காட்

மேல் தளம்    24மீ (78 அடி)    கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி

3ம் தளம்    35மீ (115 அடி)    மாதவரம்-சிப்காட்

Related Stories: