வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

டெல்லி: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த வாரம் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. சென்னையில் 36 மணி நேரத்தில் 35 செ.மீ. மழை பெய்து சாலைகள் மற்றும் தெரு வீதிகளில் வெள்ளமாக ஓடியது.

சென்னை நகரம் முழுவதும் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டதன் மூலம் மழைநீர் உடனடியாக வடிந்ததால் மக்கள் பாதிப்புக்கு ஆளாகவில்லை. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இந்நிலையில், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கையை ஒட்டிய  தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த வளிமண்டல சுழற்சி மேலும் வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறியது.

கடலுக்கு மேலே 7.6 கிலோ மீட்டர் தூரத்தில் உருவானது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளையும், நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். வரும் 12ம் தேதிக்குள் வடமேற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகர்ந்து வரக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: