முத்துப்பேட்டை : முத்துப்பேட்டையில் சாலையோரம் பயனற்ற நிலையில் இருந்த குடிநீர் தொட்டி தினகரன் செய்தி எதிரொலியாக அதிகாரிகள் மூடினர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மன்னை சாலை ரயில்வே கேட்டிலிருந்து கோஷாகுளம் வழியாக தெற்குகாடு செல்லும் சாலையில் அப்பகுதி குடிநீர் விநியோகம் செய்யும் குடிநீர் வால்வு தொட்டி ஒன்று உள்ளது. தற்போது பயன்பாட்டில் இல்லாத இந்த தொட்டி ஒரு பகுதி திறந்த நிலையில் இருந்தது. இதனால் குடிநீர் வரும் நேரத்திலும் மழை காலத்திலும் இந்த தொட்டி நிறைந்து பின்னர் குடிநீர் நிறுத்தப்பட்டதும். அந்த கலங்கிய நீர் குழாய்க்குள் சென்று விடும் இப்படி தேவையற்ற இந்த வால்வு தொட்டி சுமார் 6 அடி ஆழத்தில் இருந்தது.
சாலையோரம் இந்த தொட்டி திறந்த நிலையில் இருந்ததால் இதில் அடிக்கடி கால்நடைகள் தவறி விழுந்ததால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். அதேபோல வயதானவர்கள் தடுமாறி விழுந்து பாதிக்கப்பட்டனர். இரவில் ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த தொட்டி குடியிருப்புகள் அதிகளவில் இருக்கும் பகுதியில் உள்ளதால் குழந்தைகள் தவறி விழ வாய்ப்புகள் உள்ளது என்றும், அப்படி விழும் பட்சத்தில் குழந்தைகள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் உள்ளது என்றும் இதன் அருகில் தான் அரசு கூட்டுறவு வங்கி உள்ளது. இதற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
அதேபோல் வழியாகதான் ரயில்வே நிலையம் அரசு பள்ளிகள் முக்கிய பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டும். அதனால் இந்த சாலை எந்தநேரமும் பிசியாகவே இருக்கும் அதேபோல் அதிகளவில் வாகன போக்குவரத்தும் அதிகளவில் காணப்படும் இந்த பகுதியில் இப்படி ஒரு ஆபத்தான தொட்டியால் தற்போது பெய்து வரும் மழைநீர் நிரம்பி சாலை மட்டத்திற்கு வந்தால் பொதுமக்கள் வெளியூர் மக்கள் தொட்டி இருபது அடையாளம் தெரியாமல் அதற்குள் விழ வாய்ப்புகள் உள்ளது. எனவே இப்பகுதி மக்கள் நலன் கருதி இந்த அபாய குடிநீர் தொட்டியை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் அல்லது மூடி அமைத்து தரவேண்டும் என்றும் விரிவாக செய்தி படத்துடன் தினகரன் நாளிதழில் வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுத்து அதற்கு கான்கீரிட் மூடி அமைத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர். செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த பேரூராட்சி அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்.