அதீத வெயிலால் ஐரோப்பாவில் இந்த ஆண்டில் 15 ஆயிரம் பேர் பலி: ஐநா அதிர்ச்சி தகவல்..!

லண்டன்: அதீத வெயிலால் ஐரோப்பாவில் இந்தாண்டு மட்டும் 15 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டின் கோடைக்காலத்தின்போது ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்பம் தாக்கியது. மக்கள் வெப்பம் தாங்க முடியாமல் நீர்நிலைகளை நோக்கி படையெடுக்கும் சூழல் உண்டானது. அதோடு ஐரோப்பிய கண்டம் முழுதும் பெரும் வறட்சியை சந்தித்துள்ளது. முக்கியமாக ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இந்நிலையில் அதீத வெயிலால் ஐரோப்பாவில் இந்தாண்டு மட்டும் 15 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஐரோப்பாவுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் ஹான்ஸ் க்ளூஜ்  வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த 10 மாதங்களில் மட்டும் ஐரோப்பாவில் 15 ஆயிரம் பேர் அதீத வெயிலால் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பாவில் சராசரியாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை 0.5% செல்ஸியஸ் என்ற அளவில் வெப்பநிலை உயர்ந்து வருகிறது.

இதனால் கடந்த 50ஆண்டுகளில் மட்டும் 1.48 லட்சம் பேர் ஐரோப்பாவில் உயிரிழந்திருப்பதாகவும், இந்த ஆண்டில் மட்டும் 15 ஆயிரம் பலியாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எகிப்தில் பருவநிலை உச்சிமாநாடு நடைபெற்று வரும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Related Stories: