மணலி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ரூ.1.84 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறை பணி: எம்பி, எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர்: மணலி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ரூ.1.84 கோடி செலவில் புதிய வகுப்பறை கட்டும் பணியை கலாநிதி வீராசாமி எம்பி, கே.பி.சங்கர் எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மணலி பாடசாலை தெருவில் சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள ஒரு பகுதி கட்டிடம் மிகவும் பழுதடைந்தது. இதனால், கடந்த மாதம் பெய்த மழையின்போது மழைநீர் வகுப்பறையில் கசிந்து மாணவ, மாணவர்கள் சிரமப்பட்டனர்.

எந்த நேரத்திலும் இந்த கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருந்ததால் உடனடியாக இந்த கட்டிடத்தில் படித்த மாணவ, மாணவிகள் அருகில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டிடத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு, அங்கேயே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பழுதடைந்துள்ள பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமியிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, முதல் மாடியுடன் கூடிய 6 புதிய வகுப்பறைகள் மற்றும் கழிப்பிட வசதியுடன் கூடிய பள்ளி கட்டிடம் கட்ட ரூ.1.84 கோடி நிதியை கலாநிதி வீராசாமி எம்பி ஒதுக்கீடு செய்தார். இதனைதொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு பழைய பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது.

இந்நிலையில், பள்ளி வளாகத்தில் புதிய வகுப்பறை கட்டிட கட்டுமான பணி துவக்க விழா நேற்று நடந்தது. கே.பி.சங்கர் எம்எல்ஏ தலைமை வகித்தார். மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். கலாநிதி வீராசாமி எம்பி பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘விரைவில் வகுப்பறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு மாணவர்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படும்,’’ என்றார். நிகழ்ச்சியில், மண்டல உதவி ஆணையர் கோவிந்தராஜ், செயற்பொறியாளர் காமராஜ், உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன், கவுன்சிலர்கள் தீர்த்தி, முல்லை ராஜேஷ், திமுக நிர்வாகிகள் முத்துசாமி, நாகலிங்கம், கரிகால் சோழன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: