சேலத்தில் நகை பறிப்பின்போது கொள்ளையர்களால் தாக்கப்பட்ட மாஜி அதிகாரியின் மனைவி சாவு

சேலம்: சேலம் சின்னதிருப்பதியில் வசித்து வந்தவர் நஷீர்ஜகான்(82). இவரது கணவர் ஹபீஸ்கான் பொதுப்பணித்துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த தம்பதிக்கு 5 குழந்தைகள். அனைவருக்கும் திருமணமாகி பெங்களூரில் வசித்து வருகின்றனர். நஷீர்ஜகான் மட்டும் தனியாக சேலத்தில் வசித்து வந்தார். கடந்த 3ம் தேதி காலை 11 மணியளவில் 2 பேர் வீடு வாடகைக்கு இருக்கிறதா? என வந்து கேட்டுள்ளனர். அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என நஷீர்ஜகான் கூறியுள்ளார். பின்னர் அந்த 2 பேரும் சென்றுவிட்டனர். மாலை 3 மணிக்கு அதே 2பேர் மீண்டும் வந்து, நஷீர்ஜகானை கத்தியை காட்டி மிரட்டி தாக்கியதுடன், அவர் அணிந்திருந்த 15 பவுன் நகையை பறித்துச் சென்று விட்டனர்.

சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், சின்னதிருப்பதியை சேர்ந்த முஸ்தபா, ஜான்சன்பேட்டையை சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். மூதாட்டி நஷீர்ஜகான் தனியாக இருப்பதுபற்றி தகவல் கொடுத்த முஸ்தபாவின் சகோதரி தலைமறைவாகி விட்டார். இந்நிலையில் கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்த மூதாட்டி நஷீர்ஜகான், நேற்றுமுன்தினம் உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து கைதான கொள்ளையர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: