உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு செல்லுமாம்; இது அரசமைப்புச்சட்ட அடிக்கட்டுமானத்திற்கு விரோதம்..சீராய்வு மனு அவசியம்: கி. வீரமணி சாடல்

சென்னை: உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லுமாம்; இது அரசமைப்புச்சட்ட அடிக்கட்டுமானத்துக்கு விரோதம் என திராவிட கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கி.வீரமணி வெளியிட்டுள்ள செய்தியில், உயர்சாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு செல்லும் என்று இன்று ஓய்வுபெறும் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் உள்ள அரசியல் அமர்வு அளித்துள்ள 103வது அரசமைப்புச் சட்டத்திருத்தம் செல்லும் என்ற பெரும்பான்மை தீர்ப்பு என்பது அரசமைப்பு சட்டத்தின் அடிக்கட்டுமான சமூகநீதி தத்துவத்துக்கு நேர் முரணானது.

இந்த பொருளாதார அடிப்படையில் அது செல்லாது என்ற மண்டல குழு தொடர்பான 9 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் இருந்து தப்பிக்கவே 103வது அரசமைப்பு சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. இது அடிக்கட்டுமானத்திற்கு விரோதமானதாகும். ஒதுக்கப்பட்ட பசியேப்பக்காரனை வெளியே தள்ளி, புளியேப்பக்காரனான உயர்சாதியினரை உள்ளே விருந்துக்கு அனுப்பும் 10 சதவீத இடஒதுக்கீட்டை நியாயப்படுத்த எந்த புள்ளி விவரமும் ஆதாரமும் கிடையாது. எனவே தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுதாக்கல் செய்யப்பட வேண்டியது அவசியம், அவசரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

வழக்கின் பின்னணி:

உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்து கடந்த 2019ம் ஆண்டு ஒன்றிய அரசு சட்டம் நிறைவேற்றியது. ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்ட்டன. இட ஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டு வந்த இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு இருப்பதாக கூறி மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

நாடு முழுவதும் உற்று நோக்கப்பட்ட இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதில், உயர்ஜாதி ஏழைகளுக்கு அளிக்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று 3 நீதிபதிகளும், செல்லாது என்று 2 நீதிபதிகளும் தீர்ப்பளித்ததனர். நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பெலா திரிவேதி, பர்திவாலா ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்றும் தலைமை நீதிபதி யுயு லலித், நீதிபதி ரவீந்திர பட் ஆகிய இருவரும் செல்லாது என்றும் அறிவித்தனர்.

Related Stories: