துபாயில் பாரதியார் கவிதைகள் அரபு மொழியில் வெளியீடு

சென்னை: துபாயில் பாரதியார் கவிதைகள் அரபு மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழக அரபுத்துறைப்  பேராசிரியர் முனைவர் அ. ஜாகிர் ஹுசைன் தமிழிலிருந்து  அரபியில் மொழியாக்கம் செய்துள்ள பாரதியார் கவிதைகள் நேற்று மாலை துபாய் அல்ஜதாஃப் ஹில்டன் டபுள் ட்ரீ நட்சத்திர ஹோட்டலில் அமீரக எழுத்தாளர் மற்றும் வாசகர் குழுமம் ஒருங்கிணைத்த நிகழ்வில்  வெளியிடப்பட்டது. அமீரகத்தின் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் அரசு செயலாளர் மாண்பமை  ஹெஸ்ஸா தெஹ்லக் நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.

அமீரக எழுத்தாளர் அஸ்மா அல் ஸர்வூனி மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் தொழிற்நுட்ப ஆலோசகர் திரு. சயீத் அப்துல்லா முதல் மற்றும் இரண்டாது பிரதிகளைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினர். பேராசிரியர் ஜாகிர் ஹுசைன் தனது ஏற்புரையில் தமிழர் அரேபியர் உறவு குறித்தும் தனது மொழியாக்க அனுபவம், பாரதியார் கவிதைகள் அரபு மொழியாக்கம் உருவான பின்னணி குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். எழுத்தாளர் ஆசிப்  மீரான் வரவேற்புரை நிழ்த்தினார். கேலக்ஸி பதிப்பகத்தின் பாலாஜி பாஸ்கரன் நன்றியுரை வழங்கினார். எழுத்தாளர் ஜெஸிலா பானு நிகழ்ச்சியைத் தொகுத்தார்.

திமுக அமைப்பாளர் எஸ்.எஸ்.மீரான், புக்டோபியாவின் நிறுவனர் மலர்விழி, ஜெம்ஸ் குழுமத்தின் கிருஷ்ணன் கோபி, மருத்துவர் பென்னட், தொழில்முனைவர் முகமது முஹைதீன், புகழேந்தி, அனஸ், துபாய் தமிழ்ச்சங்கத்தின் தாஹா, பிரசன்னா, எழுத்தாளர் நஸீமா, கிரியேடிவ் டிஜிட்டல்ஸின் ஆரிஃப், எஸ் ஈவண்ட்ஸின் வெங்கட், டோக்கியோ தமிழ்ச்சங்கத்தின் ஹரி, லீடர் ஸ்போர்ட்ஸின் ரமேஷ் ராமகிருஷ்ணன், ஈமான் அமைப்பின்  யாஸீன், பொன்மாலைப் பொழுதின் கணேஷன் ராமமூர்த்தி, 89.4 பண்பலையின் பாலா, தனிக்கையாளர் கரணாகரன்,  காப்டென் டிவியின் கமால், அமீரக எழுத்தாளர் மற்றும் வாசகர் குழுமத்தின் உறுப்பினர்கள் மற்றும் தமிழ்ச் சொந்தங்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அமீரக அரசு அதிகாரிகளும் அரபு எழுத்தாளர்களும் பாரதியார் கவிதைகள் அரபு மொழியாக்கத்தை வெகுவாகப் பாராட்டினார். பேராசிரியர் ஜாகிர் ஹுசைன் செய்திருக்கும் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது இந்திய அமீரக உறவை  வலுப்படுத்தக் கூடிய சிறப்பான பணி என்று பாராட்டினர். பேராசிரியர் ஜாகிர் ஹுசைன் ஏற்கனவே திருக்குறளையும் அவ்வையின் ஆத்திசூடியையும் அரபியில் மொழியாக்கம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருக்குறள், ஆத்திசூடி, பாரதியார் கவிதைகள் உள்ளிட்ட மிக முக்கியமான தமிழ் இலக்கியங்களின் அரபு மொழியாக்க நூல்கள் அரபு நாட்டு அரசு உயர் அதிகாரிகள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள்  கரங்களில் இருப்பதைப் பார்க்கும்போது பாரதி கண்ட கனவு நனவாகும் இனிய பொழுதை உணர முடிகிறது.

Related Stories: