அண்ணாநகர், அமைந்தகரையில் கஞ்சா விற்றவர் கைது: 350 கிராம் கஞ்சா பறிமுதல்

அண்ணாநகர்: சென்னை டி.பி. சத்திரம், கீழ்பாக்கம் உள்பட பல பகுதிகளில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், கீழ்ப்பாக்கம் உதவி ஆணையர் ரமேஷ், ஆய்வாளர் சக்தி வேலாயுதம் ஆகியோர் தலைமையில், தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், அண்ணாநகர் வேலங்காடு சுடுகாடு அருகே  ஒருவர் கஞ்சா விற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், டி.பி சத்திரம் போலீசார் மாறுவேடத்தில் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு ஒருவர், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றார். அவரை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்து கைது செய்து விசாரித்தனர். அதில், அவர் டி.பி.சத்திரம் பூஜ்ஜி தெருவை சேர்ந்த எழிலரசன் (49) என்பதும், இவர் அண்ணாநகர், அமைந்தகரை, அரும்பாக்கம் மற்றும் டி.பி.சத்திரம் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும், இவர் மீது ஏற்கனவே கஞ்சா மற்றும் அடிதடி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடம் இருந்து 350 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: