நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை; மருதாநதி அணை நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி

பட்டிவீரன்பட்டி: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக மருதாநதி அணை முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதனால் அணைக்கு வரும் உபரிநீர் திறந்து விடப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் அருகே மருதாநதி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 74 அடியாகும்.

ஆனால் அணையின் பாதுகாப்பு கருதி 72 அடி உயரத்திற்கு மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படும். இந்நிலையில், தற்போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக அணை முழுகொள்ளளவை எட்டியுள்ளது. அணைக்கு தற்போது 106 கனஅடி தண்ணீர் வீதம் வந்துகொண்டிருக்கின்றது. அந்த உபரிநீர் அப்படியே உபரியாக பிரதான வாய்க்காலில் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் தற்போது 180 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பில் உள்ளது. அணை தொடர்ந்து முழு கொள்ளளவுடன் உள்ளதால் அணையின் நிலவரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

 

இந்த அணை தண்ணீர் மூலமாக நிலக்கோட்டை, ஆத்தூர் ஆகிய 2 தாலுகாக்களைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் மூலமாக முதல் போக நெல் நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. அணை நிரம்பியுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: