சிலைக் கடத்தல் வழக்கு விசாரணையில் முறைகேடு; பொன்.மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்கு; மாஜி ஐஜி: சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு மத்தியில் பரபரப்பு

புதுடெல்லி: சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல் மீது இன்று சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு விசாரணையில் உள்ள நிலையில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச கடத்தல் கும்பலோடு கூட்டு சேர்ந்து பல கோடி மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்ட டி.எஸ்.பி-யாக இருந்த காதர் பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதனிடையே காதர் பாஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். அதில், ‘பழவலூர் சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக, அவருடன் கூட்டு சேர்ந்து பொன்.மாணிக்கவேல் (அப்போது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் ஐஜி) அதிகார ரீதியில் தம்மை பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்கு பதிவு செய்தார். அதனால் இந்த விவகாரத்தை சி.பி.சி.ஐ.டி வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்’ என்று அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவரது கோரிக்கையை பரிசீலித்த சென்னை உயர்நீதிமன்றம், பொன்.மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த ஜூலை மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் கிருஷ்ணா முராரி அமர்வு விசாரித்து வருகிறது. இவ்வழக்கின் விசாரணை நேற்று வந்தபோது, வழக்கை அடுத்த வாரம் ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் திடீர் திருப்பமாக காதர் பாட்ஷா கொடுத்த புகாரின் அடிப்படையிலும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும் விசாரணை நடத்திய சிபிஐ, பழவலூர் கோயில் சிலை உட்பட 13 சிலைகள் திருடப்பட்ட வழக்கு விசாரணையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, அப்போதைய சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல் மீது வழக்கு பதிந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு விசாரிக்கப்பட உள்ள நிலையில், பொன்.மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளதால் இவ்வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: