தமிழகத்தில் மற்ற இடங்களில் தள்ளிவைப்பு; கடலூரில் திட்டமிட்டபடி இன்று ஆர்எஸ்எஸ் பேரணி; போலீஸ் குவிப்பு

கடலூர்: உயர்நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளால் தற்காலிகமாக ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைக்கப்படும் என அறிவித்த நிலையில் கடலூரில் திட்டமிட்டபடி இன்று பேரணி, பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு நடைபெறுவதால் போலீசார் அதிகளவில் குவிக்கப்படடு வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றம் விதித்த பல்வேறு கட்டுப்பாடுகளால் பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே கடலூரில் திட்டமிட்டபடி ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் கடலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தும்படி மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி கடலூரில் வெடிகுண்டு நிபுணர்கள் இன்று  மெட்டல் டிடெக்டர் (வெடிகுண்டு சோதனை) கருவி மூலம் பாடலீஸ்வரர் கோவில் சன்னதி தெரு, திருப்பாதிரிப்புலியூர், திருவந்திபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும் மோப்பநாய் மூலமும் வெடிகுண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெரு அருகே ஆர்எஸ்எஸ் சார்பில் இன்று மாலை பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. 100க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணிகளை கவனித்து வருகின்றனர். இதனால் கடலூரில் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

Related Stories: