தமிழகத்தின் ஒற்றுமையை சீர்குலைப்பதே ஆர்.எஸ்.எஸ். பேரணியின் நோக்கம்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு வகையில் கலவரத்தை ஏற்படுத்தி மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்.பேரணியின் நோக்கம் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். சென்னை பட்டாளத்தில் உள்ள உயர்நிலை பள்ளியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு. நேற்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இதில் சென்னை மேயர் பிரியா, எம்எல்ஏ தாயகம் கவி மற்றும் பலர் இருந்தனர்.

பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 9ம்தேதி கனமழை இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதை சமாளிக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புளியந்தோப்பு, சவுகார்பேட்டை பகுதியில் கட்டிடம் இருந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை அப்புறப்படுத்துவது தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. மாநகராட்சியும் நோட்டீஸ் வழங்கி உள்ளது. ஆனாலும் கீழமை நீதிமன்றத்தில் ஒப்புதல் பெற்று குடியிருந்து வந்துள்ளனர். மேலும், பழமையான கட்டிடத்தில் இருப்பவர்களை கண்டறிந்து மாற்று இடத்தில் தங்க வைக்கும் பணி நடந்து வருகிறது.

ஆர்.எஸ்.எஸ்., பேரணி நடத்துபவர்களுக்கு மக்களை பற்றி கவலை இல்லை. அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு வகையில் கலவரத்தை ஏற்படுத்தி மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்.பேரணியின் நோக்கம். இப்படிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு தடைக்கல்லாக நிச்சயம் முதல்வர் இருப்பார். தமிழகத்தை அமைதி பூங்காவாக வைத்துக்கொள்ள முதல்வர் எந்தவித நடவடிக்கையையும் எடுப்பதற்கு, அதன் எல்லைவரை சென்று நடவடிக்கை எடுப்பார். மேலும், மக்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்று பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் அவர்களின் கொள்கை கோட்பாடு திட்டங்களை நிறைவேற்ற இதுபோன்ற அமைதி ஊர்வலம் என்ற பெயரில் வன்முறை ஏற்படுத்தும் நிகழ்வுகளை ஊடகங்கள் தோலுரித்து காட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: