தமிழகத்தில் இன்று நடக்க இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி திடீர் ஒத்திவைப்பு: உயர்நீதிமன்றம் கடும் கட்டுப்பாடு விதித்ததால் முடிவு; மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான விதிமுறைகளை விதித்தது. இதையடுத்து இன்று நடைபெற இருந்த பேரணியை ஆர்எஸ்எஸ் திடீரென ஒத்தி வைத்துள்ளது. மேலும், இது தொடர்பாக மேல் முறையீடு செய்யவும் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ம் தேதி சென்னை உள்பட மாநிலம் முழுவதும் 51 இடங்களில் பேரணி நடத்த முடிவு செய்தது. இதற்காக அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சார்பில் அனுமதி கோரப்பட்டது.

ஆனால், அப்போது கோவையில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழகத்தில் பல இடங்களில் சோதனை நடத்தினர். இதனால் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழகத்தில் காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. உடனே ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பேரணிக்கு அனுமதி கேட்டு 50க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தலாம் என்றும், அதேநேரம் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்தது.

அதன்படி, உளவுத்துறை அறிக்கையில் பதற்றம் நிறைந்த பகுதிகளாக சுட்டிக்காட்டப்பட்ட கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், நாகர்கோவில், அருமனை ஆகிய 6 இடங்களில் அணிவகுப்புக்கு அனுமதி கிடையாது. மற்ற 44 இடங்களை பொறுத்தவரை, சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்கள், ஸ்டேடியங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பும், பொதுக்கூட்டமும் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. பேரணியின்போது பொதுமக்களுக்கோ, போக்குவரத்துக்கோ இடையூறு இல்லாமல் செல்ல வேண்டும். நிகழ்ச்சியின்போது பாடல்கள் பாடவோ, தனிப்பட்ட நபர்கள், மதம், ஜாதி குறித்து தவறாக பேசவோ கூடாது.

தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் குறித்து பேசவோ, கருத்து தெரிவிக்கவோ கூடாது. இந்திய ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்படக் கூடாது. லத்தி, கம்பு போன்ற ஆயுதங்கள் எடுத்து செல்லக் கூடாது, பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் அதற்கான இழப்பீட்டை செலுத்துவதாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 நிபந்தனைகளை நீதிபதி விதித்தார். இந்த நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு 44 இடங்களில் நிபந்தனைகளுடன் பேரணி நடத்த தமிழக காவல் துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. பேரணி நடைபெறும் 44 இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் மேற்கொண்டு வந்தனர். பிரச்சனைக்குள்ள பகுதிகளில் வெளிமாவட்டங்களில் இருந்து போலீசார் வர வைப்பதற்கான ஏற்பாடுகளும் காவல்துறை சார்பில் செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (6ம் தேதி) நடைபெற இருந்த பேரணியை ஆர்எஸ்எஸ் அமைப்பு நேற்று திடீரென ரத்து செய்து, தேதி குறிப்பிடாமல் தங்களது பேரணியை ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்எஸ்எஸ்) தென்மண்டலம் தலைவர் இரா.வன்னியராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்எஸ்எஸ்) சார்பில், கடந்த 97 ஆண்டுகளாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் அணிவகுப்பு ஊர்வலங்களை அமைதியான முறையில் நடத்தி வருகிறோம். தமிழகத்திலும் பல ஆண்டுகளாக அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி வருகிறோம். பாரத நாட்டின் 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டும், அம்பேத்கர் பிறந்த 125 ஆண்டை முன்னிட்டும் இந்த ஆண்டு தமிழகத்தில் 50 இடங்களில் அக்டோபர் 2ம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த தமிழக அரசின் காவல் துறையிடம் மனு அளித்தோம். அவர்கள் எங்கள் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நாங்கள் உயர் நீதிமன்றத்தை அணுகினோம்.

கடந்த மாதம் நீதிமன்றத்தை அணுகியபோது, நீதிமன்றம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு காரணத்தினால் அணிவகுப்பை நவம்பர் 6ம் தேதி நடத்த கூறினார்கள். அதை ஏற்று நாங்கள் நவம்பர் 6ம் தேதி (இன்று) அணிவகுப்பை நடத்த இருந்தோம். நேற்று முன்தினம் (4ம் தேதி) வந்த தீர்ப்பில் அணிவகுப்பு ஊர்வலத்தை உள் அரங்கிலோ அல்லது நான்கு சுவர்களுக்குள்ளோ நடத்துமாறு நீதிமன்றம் கூறியிருப்பது எங்களுக்கு ஏற்புடையதல்ல. காஷ்மீர், கேரளம், மேற்கு வங்கம் போன்ற எல்லா இடங்களிலும் அணிவகுப்பு பொது வெளியில் நடைபெற்று கொண்டு இருக்கிறது. நாங்கள் சட்டரீதியாக இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம். அதனால், நவம்பர் 6ம் தேதி (இன்று) நடக்க இருந்த ஊர்வலத்தை இத்தகைய காரணங்களால் நடத்த இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* பதற்றம் நிறைந்த பகுதிகளாக சுட்டிக்காட்டப்பட்ட கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், நாகர்கோவில், அருமனை ஆகிய 6 இடங்களில் அணிவகுப்புக்கு அனுமதி கிடையாது.

* பேரணியின்போது பொதுமக்களுக்கோ, போக்குவரத்துக்கோ இடையூறு இல்லாமல் செல்ல வேண்டும். பாடல்கள் பாடவோ, தனிப்பட்ட நபர்கள், மதம், ஜாதி குறித்து தவறாக பேசவோ கூடாது என ஐகோர்ட் நிபந்தனை விதித்தது.

Related Stories: