நன்மங்கலம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீரை நாராயணபுரம் ஏரிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை: கலெக்டரிடம் எம்எல்ஏ கோரிக்கை

தாம்பரம்: தாம்பரம் அடுத்த நன்மங்கலம் ஏரியிலிருந்து ஆண்டுதோறும் மழைக்காலத்தில் வெளியேறும் உபரி நீர், குரோம்பேட்டை அருகேயுள்ள நெமிலிச்சேரி வழியாக அருள்முருகன் நகர், நந்தவனம் பகுதி உட்பட ஏராளமான குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இதற்கு நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதேபோல், தாம்பரம் - தர்காஸ் சாலையில் உள்ள  பாப்பான் கால்வாயில் இருந்து வெளியேறும் உபரிநீர், கால்வாயை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து, பொதுமக்கள் வீட்டில் தங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறும் நிலை உள்ளது.

இந்நிலையில், நேற்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தாம்பரம் - தர்காஸ் சாலையில் உள்ள பாப்பான் கால்வாயில் மழை நீர் வெளியேறுவதை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அதனைதொடர்ந்து, குரோம்பேட்டை, நெமிலிச்சேரி, அருள்முருகன் நகர், நந்தவனம் நகரில் மழைநீர் வடிகால்வாய் வழியாக மழைநீர் வெளியேறுவதை மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

அப்போது, நன்மங்கலம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீரை தடுப்பு கால்வாய் அமைத்து கீழ்கட்டளை வழியாக நாராயணபுரம் ஏரிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக திட்ட மதிப்பீடு தயார் செய்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.

மேலும், தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பேரிடர் உதவி மையத்தை செங்கல்பட்டு கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, மழை பாதிப்புகள் குறித்த புகார்களுக்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறதா, அனைத்து அழைப்புகளுக்கும் முறையாக பதில் அளிக்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.

Related Stories: