பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு: ஐகோர்ட்டில் இறுதி வாதம் தொடங்கியது

சென்னை: ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சியின் அடுத்த பொதுச்செயலாளராக.சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்தெடுத்தக்கப்பட்டதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது. பின்னர், சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு 2017 செப்டம்பரில் நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். சசிகலாவின் இந்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை உரிமையியல் நீதிமன்றம் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் எனவும் இந்த வழக்கை தாக்கல் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு நேற்று இறுதி விசாரணைக்கு வந்தபோது, சசிகலா சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால் ஆஜராகி வாதிட்டார். தேர்தல் ஆணையம் சின்னம் தொடர்பாகவே முடிவு செய்து உத்தரவிட்டது. கட்சியின் உரிமை தொடர்பாக சிவில் நீதிமன்றம் மட்டுமே முடிவு செய்ய முடியும் என்று தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது என்றார். வாதம் முடியாததால் விசாரணையை வரும் டிசம்பர் 8ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Related Stories: