விவசாயிகளை பாதுகாக்க அரசு என்றும் உறுதுணையாக இருக்கும்

*திண்டுக்கல் ஆய்வு கூட்டத்தில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் பேச்சு

திண்டுக்கல் : விவசாயம், விவசாயிகளை பாதுகாக்க தமிழக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும்என தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு குழு சார்பில் ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு குழுத் தலைவர் டி.ஆர்.பி.ராஜா தலைமை வகித்தார்.

அரசு செயலாளர் சீனிவாசன், அரசு கூடுதல் செயலாளர் சுப்பிரமணியம், கலெக்டர் விசாகன், எம்பி வேலுச்சாமி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு உறுப்பினர்கள் ஐ.பி.செந்தில்குமார், இரா.அருள், க.அன்பழகன், ஈ.ஆர்.ஈஸ்வரன், ஈ.பாலசுப்பிரமணியன், ஜெ.முகம்மது ஷாநவாஸ், எஸ்.ராஜ்குமார், செல்லூர் கே.ராஜு, கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி, மாவட்ட ஊராட்சி தலைவர் பாஸ்கரன், டிஆர்ஓ லதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி, நமக்கு நாமே திட்டம் ஆகிய நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி பணிகளில் முடிவடைந்த பணிகள், நடைபெற்று வரும் பணிகள், மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகள், இன்னும் எத்தனை குடியிருப்புகளுக்கு இணைப்புகள் வழங்கப்படவுள்ளன என்பது குறித்தும், அனைத்து குடியிருப்புகளுக்கும் விரைந்து குடிநீர் இணைப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை செய்யும் பணிகள், முடிக்கப்பட்டுள்ள பணிகள், மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை மேம்பாட்டு பணிகள், மாவட்டத்தில் தடுப்பணை எங்கெங்கு அமைக்கப்பட வேண்டும் என்பதன் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

துாய்மை பாரத இயக்கத்தின் கீழ் மாநகராட்சி பகுதியில் கழிப்பறைகள் புதுப்பிக்கும் பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் 100 சதவீதம் திடக்கழிவுகளையும் பிரித்தாளுதல், நகரப்புற பகுதியில் வீடு வசதி திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி வழங்குதல், தரிசு நில மேம்பாட்டு திட்டம் குறித்து குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.கூட்டத்திற்கு பின்னர் குழு தலைவர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினரின் 2 நாள் பயணம் திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. முதல் நாளில் கொடைக்கானல் நகராட்சி மற்றும் கிராமப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள், பொதுமக்களின் தேவைகள், சுற்றுலா மேம்பாட்டு பணிகள் தொடர்பாக பல்வேறு இடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தோம்.

இரண்டாம் நாளில் திண்டுக்கல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக விவசாயம் தொடர்பான பணிகள், விவசாயிகள் நலன் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விவசாயிகளிடம் அவர்களின் தேவைகள், விவசாய பணிகள் மேம்பாட்டுக்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அதேபோல் மகளிர் சுயஉதவி குழுக்கள் மேம்பாடு தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை அரசின் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பல முக்கிய கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. குறிப்பாக பல்வேறு பகுதிகளில் தடுப்பணைகள் அமைப்பது தொடர்பாகவும், வீட்டுமனை பட்டா வேண்டுதல் தொடர்பாக கோரிக்கைகளும் வரப்பெற்றுள்ளன. ஒன்டைம் செட்டில்மென்ட் மூலம் இப்பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். வனவிலங்குகள் தொடர்பான கோரிக்கைகளும், வெள்ளக்கெவி சாலை அமைப்பது தொடர்பான கோரிக்கைகளும் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கொடைக்கானல் லேக் பகுதியில் உள்ள சாலை, நெடுஞ்சாலை துறையிடம் இருந்து மாற்றம் செய்யப்பட்டு நகராட்சிக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மழைநீர் சேகரிப்பு திட்டங்களை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும் அரசின் திட்டங்களும் சிறப்பாக பாராட்டும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் பல்வேறு கோரிக்கைகளை எழுத்து மூலமாக அளித்துள்ளார். அவைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

திண்டுக்கல்லில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமைக்க நில ஆர்ஜித பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் நல்ல அறிவிப்புகளை வெளியிடுவார். விவசாயம் மற்றும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயம் மற்றும் விவசாயிகளை பாதுகாக்க தமிழக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் பார்வையிட்டனர். தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில், திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த மகளிர் சுயஉதவி குழு உற்பத்தி பொருட்கள் கண்காட்சியை மதிப்பீட்டு குழுவினர் பார்வையிட்டு, சுயஉதவி குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டனர். ஊராட்சி அளவிலான மகளிர் சுயஉதவி குழு கூட்டமைப்புகளுக்கு ரூ.2.05 கோடி மதிப்பிலான வங்கி பெருங்கடன் உதவிகளை சிவகிரிப்பட்டி, பாப்பம்பட்டி, கணக்கண்பட்டி ஆகிய 3 கூட்டமைப்புகளுக்கு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார்.

இதில் மாவட்ட எஸ்பி பாஸ்கரன், மாவட்ட வன அலுவலர் பிரபு, கொடைக்கானல் வனச்சரகர் திலீப், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திட்ட இயக்குநர் சரவணன், திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா, மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியம், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் பொன்ராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் அமர்நாத், ராணி மற்றும் துணை ஆட்சியர்கள், நகராட்சி தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள், தாசில்தார்கள், பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: