பெரியகுளம் கும்பக்கரை அருவி பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா அமைத்து தர வேண்டும்: சுற்றுலா பயணிகள் கோரிக்கை

பெரியகுளம்: பெரியகுளம் கும்பக்கரை பகுதியில் பொழுது போக்கு பூங்கா அமைத்து தர வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 8 கிலோமீட்டர் தொலைவில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இயற்கைச் சூழலில் அமைந்துள்ள இந்த அருவிக்கு கொடைக்கானல் மற்றும் வட்டக்காணல் பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழை காரணமாக நீர் வரத்து இருக்கும். தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி வரும் தண்ணீர் அடர்ந்த வனப் பகுதி வழியாக எழில் கொஞ்சும் கும்பக்கரை அருவிக்கு வருகிறது.

பல்வேறு மூலிகைகள் கலந்து தண்ணீர் வருவதால் இதில் குளிக்கும் போது புத்துணர்ச்சி ஏற்படுவதாக பெரியகுளம் பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கூறுகின்றனர். இந்த அருவியில் இருந்து வெளியேறும் நீர், ஆறாக மாறி பெரியகுளம்-மதுரை சாலையில் உள்ள நந்தியாபுரம் கன்மாயில் நீர் நிரம்புவதால் இதனை நம்பி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாயிகள் மா, தென்னை, வாழை நெல் போன்ற பயிர்களை பயிரிட்டு பலனடைந்து வருகின்றனர். கும்பக்கரை அருவியில் பல்வேறு கட்டங்களில் சினிமா படப்பிடிப்புகளும் நடைபெற்று வந்துள்ளன.

அப்படி கும்பக்கரை அருவிகளில் எடுக்கும் திரைப்படங்கள் வெற்றி பெறுவதாக திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு நம்பிக்கையில் உள்ளனர். அதன் அடிப்படையில் பெரிய குளம் கும்பக்கரை அருவியில் ஏதாவது ஒரு சினிமா படத்தின் கட்டாயம் படம் பிடித்துவிடுவர். மேலும் கும்பக்கரை அருவியில் சிறிய அளவு கூட வெள்ளம் வந்தால் உடனடியாக மூடப்பட்டு பல்வேறு நாட்களுக்குப் பிறகுதான் திறக்கப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் பெரியகுளம் வரும் போது மக்கள் அருவியில் குளிக்க முடியாமலும் சுற்றி பார்க்க முடியாமலும் அவதிக்குள்ளாவதாக தெரிவிக்கின்றனர். மேலும் அருவிக்கு வரும் பொது மக்களை கண்காணிக்கவும் வரி வசூல் செய்யவும் வனத்துறை சார்பிலும் கீழவடகரை ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் இரு வேறு வசூல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

அருவியை அடிக்கடி பொதுமக்கள் பார்வையிட தடை விதிப்பதால் அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படுகின்றது. மேலும் இந்த அருவிக்கு வரும் பொது மக்களை சுற்றுலா பயணிகளை நம்பி சில வியாபாரிகளும் உள்ளனர். அவர்களுக்கும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். ஆகவே தமிழக சுற்றுலாத்துறை அமைச்சகம் பெரியகுளம் கும்பக்கரை அருவியை நேரில் ஆய்வு செய்து அனைத்து நாட்களிலும் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்லும் வகையிலும் பாதுகாப்பு உபகரணங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் எனவும் பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் அருவிப்பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் குடிநீர் தொட்டிகள் அமைக்க வேண்டும்.

குழந்தைகள் பெண்கள் என அனைவரும் வந்து செல்லும் கும்பக்கரை அருவிப்பகுதியில் குழந்தைகள், சிறுவர்களுக்கான பொழுது போக்கு பூங்கா மற்றும் விளையாட்டு பூங்கா ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் எனவும், வயதானவர்கள் செக் போஸ்டில் இருந்து செல்வதற்காக பேட்டரி கார் பயன்படுத்தி வனத்துறை சார்பில் பயன்பாட்டிற்கு உள்ளன. அதனையும் விரிவு படுத்தி அதிகளவு பேட்டரி கார்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் நிறுத்துவதற்காக வாகனம் நிறுத்தும் இடத்தில் அரசு முறையான வசதிகளோடு செய்து தர வேண்டும் எனவும் சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அருவிப்பகுதிகளில் பொதுமக்களின் பார்வைக்காக கல்லூரி மாணவ, மாணவியர்களின் கல்விக்காகவும் மூலிகைத் தோட்டங்களை அமைத்து அதனை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வர வேண்டும் எனவும், அனைத்து நாட்களிலும் கும்பக்கரை பகுதியை பார்வையிட பாதுகாப்பு உபகரணங்களை பலப்படுத்திட வேண்டும். சுற்றுலா பயணிகளின் வருகை பொதுமக்களின் வருகையை ஒட்டி புற காவல் நிலையம் ஒன்று அமைக்க வேண்டும் பெரியகுளம் பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பணிகளின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: