தற்காலிக தூய்மை பணியாளர்கள் ஸ்டிரைக்: மாநகராட்சியில் நாள்தோறும் 100 மெ.டன் குப்பைகள் தேக்கம்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி தற்காலிக தூய்மை பணியாளர்கள் தொடர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருவதால் மாநகர பகுதியில் நாள்தோறும் 100 மெட்ரிக் டன் குப்பைகள் தேக்கமடைந்து வருகின்றன. ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகளில் தற்காலிக அடிப்படையில் தூய்மை பணிகள், மலேரியா ஒழிப்பு, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் 1,500க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், மாநகராட்சி, நகராட்சிகளில் அடிப்படை சேவை பணிகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், குடிநீர் வழங்கல் மற்றும் தொடர்புடைய கட்டமைப்புகளை இயக்கி பராமரித்தல், கழிவு நீர் அகற்றுதல், தெரு விளக்குகளை பராமரித்தல் போன்ற பணிகளை அவுட்சோர்சிங் மூலம் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ள தமிழக நகராட்சிகள் நிர்வாகம் உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாநகராட்சியில் பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் கடந்த 3 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் மாநகரில் நாளொன்றுக்கு 100 மெட்ரிக் டன் குப்பைகள் தேக்கமடைந்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலமும் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் முதலாவது மண்டலத்தில் 46122 வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளன. இதன் மூலம் நாளொன்றுக்கு 35 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரமாகின்றது. இதேபோல 2வது மண்டலத்தில் 58177 குடியிருப்புகள் மற்றும் பூங்கா, தினசரி காய்கறி மார்க்கெட் ஆகியவை உள்ளது. இதில் இருந்து 35 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரமாகின்றது.

3வது மண்டலத்தில் 48134 குடியிருப்புகளில் இருந்து 40 மெட்ரிக் டன்னும், 4வது மண்டலத்தில் உள்ள 40473 குடியிருப்புகளில் இருந்து 40 மெட்ரிக் டன் குப்பைகள் என மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினமும் 150 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரமாகி வருகின்றது. இவைகள் அனைத்தும் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் அனைத்தும் உரங்களாக தயாரிக்கப்பட்டு வருகின்றது. இதனிடையே தற்காலிக தூய்மை பணியாளர்களின் ஸ்டிரைக் காரணமாக குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களில் குப்பைகள் சேகரிக்கும் பணி தடைபட்டுள்ளது.

இதனால் நாளொன்றுக்கு சராசரியாக 100 மெட்ரிக் டன் குப்பைகள் தேக்கமடைந்து வருகின்றது. குடியிருப்பு பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை வாங்குவதற்கு பணியாளர்கள் வராததால் சாலையோரங்களில் ஆங்காங்கே குப்பைகளை பொதுமக்கள் கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே தூய்மை பணியாளர்களின் தொடர் ஸ்டிரைக்கினை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், இல்லையெனில் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: