'குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்தது கடவுளின் செயல்': பராமரிப்பு நிறுவனம் கூறிய கருத்தால் சர்ச்சை..!!

காந்திநகர்: குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்தது கடவுளின் செயல் என பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட நிறுவனம் கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்து 135 பேர் உயிரிழந்தது தொடர்பாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட ஒரேவா நிறுவனத்தின் மேலாளர்களின் ஒருவரான தீபக் பரேக் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரேவா நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகமாட்டோம் என மோர்பி, ஜார்கண்ட் வழக்கறிஞர்கள் சங்கங்கள் முடிவெடுத்துள்ளன.

இது தொடர்பான வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ஆஜர் படுத்தப்பட்ட தீபக், மோர்பி பால விபத்து கடவுள் விருப்பப்படி நிகழ்ந்த எதிர்பாராத விபத்து என கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 2016ம் ஆண்டில் கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இது கடவுளின் செயல் அல்ல, ஊழலின் விளைவு என பேசி இருந்தார். தற்போது அதை சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சிகள், மோர்பியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்ததும் கடவுளின் செயல் அல்ல, ஊழலின் விளைவு என சுட்டிக்காட்டியுள்ளனர்.

மோர்பி பாலம் புனரமைப்பு பணியில் ஈடுபட்ட பொறியாளர்கள், தகுதி வாய்ந்தவர்கள் இல்லை என்றும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் காப்பாற்றுவதற்கான உயிர்காக்கும் சாதனங்கள், அங்கு இல்லை என்றும் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதேபோல தொங்கு பாலத்தின் கேபிள் வயர்கள் அதிகளவில் பொதுமக்கள் கூடுவதற்கு ஏற்ற வகையில் இல்லாமல் துருப்பிடித்து இருந்தது தடயவியல் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

கேபிள் வயர்களை இலகுவாக்க எண்ணெய், கிரீஸ் போன்ற பொருட்கள் பயன்படுத்தாமல் பெயிண்ட் அடித்து பாலிஷ் செய்து பாலத்தை திறந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொறியாளர்கள் இருவர் உட்பட நால்வரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. விசாரணையில் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: