சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு: மக்களிடம் தொலைபேசியில் பேசி கோரிக்கைகளை கேட்டறிந்தார்

சென்னை: எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று அதன் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 26-09-2022 அன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில், அரசு துறை செயலாளர்கள் மற்றும் துறை தலைவர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிக்கையில், தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (1ம் தேதி), மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை செய்து உரிய அறிவுரைகளை வழங்கினார். கடந்த இரு தினங்களாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, மாநிலத்தில் பெய்துவரும் மழை, வெள்ளம் குறித்த விவரங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் தகவல்கள் குறித்து கேட்டறிந்தார்.

மாவட்ட கலெக்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் அனுப்ப வேண்டிய முன்னெச்சரிக்கை செய்திகளை உடனடியாக அனுப்பவும், 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக வரப்பெறும் புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கினார்.  மேலும், திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள், ஆவடி மற்றும் தாம்பரம் மாநகராட்சி ஆணையர்கள் ஆகியோரை அங்கிருந்தபடி தொடர்பு கொண்டு கள நிலவரத்தை கேட்டறிந்து, நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.

மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்ட பொதுமக்களிடமும் முதல்வர் தொலைபேசி மூலம் உரையாடி அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து, அவற்றின் மீது உடனடியாக  நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், வெள்ளப் பாதிப்பு குறித்த புகார் தெரிவிக்கப்பட்டவுடன் அரசு துரிதமாக செயல்பட்டு பாதிப்புகளுக்கு தீர்வு கண்டு வருவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த ஆய்வின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணி துறை அமைச்சர்  எ.வ.வேலு,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் குமார் ஜெயந்த், பேரிடர் மேலாண்மை இயக்குநர்  ராமன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: