ஒமிக்ரான் உருமாற்ற வைரசால் இந்தியாவில் புதிய கொரோனா அலை: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

புதுடெல்லி: புதிய உருமாற்ற ‘எக்ஸ்பிபி’ வைரசால், இந்தியாவில் மீண்டும்  கொரோனா அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சீனாவில் இருந்து கிளம்பிய கொரோனா வைரஸ், கடந்த 2  ஆண்டுகளாக உலகத்தை ஆட்டிப்படைத்து விட்டது. கோடிக்கணக்கான மக்கள் உயிரிழப்பு, பாதிப்பு, பொருளாதார சீரழிவு என பல நாசங்களை செய்து விட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தடுப்பூசி போன்ற நடவடிக்கைகளால் தற்போது, உலகின் பெரும்பாலான நாடுகளில் இதன் தாக்குதல் தடுக்கப்பட்டு விட்டது.

ஒரு சில நாடுகளில் மட்டுமே தற்போது பரவி வருகிறது. இருப்பினும்,  பாதிப்பும், உயிர் பலியும் மிக குறைவாகவே காணப்படுகிறது. இந்நிலையில், இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா அலை ஏற்படுவதற்கான அபாயம் உருவாகி இருக்கிறது. கொரோனா வைரசில் இருந்து  உருவான ஒமிக்ரான் வைரஸ், தற்போது பல்வேறு உருமாற்றங்களை அடைந்து வருகிறது.

அவற்றில், ‘எக்ஸ்பிபி’, எக்ஸ்பிபி-1’ ஆகியவை முக்கியமானவை. குறிப்பாக, எக்ஸ்பிபி உருமாற்ற வைரசால்தான் புதிய அலை ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இது குறித்து, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறுகையில், ‘எக்ஸ்பிபி வைரசால் மற்றொரு கொரோனா அலை உருவாகும். ஆனால், கடந்தாண்டு டெல்டா வைரஸ் ஏற்படுத்தியது போன்ற பயங்கரமான பாதிப்பை இது ஏற்படுத்தாது,’ என்று தெரிவித்தார்.

 இந்தியாவில் இது பண்டிகை காலம். தென் மாநிலங்களிலும், வட மாநிலங்களிலும் வரிசையாக பல பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, மக்கள் கூட்டமாக கூடுவது அதிகமாகி இருக்கிறது. எனவே, புதிய வைரசால் பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயம் அதிகமாகவே காணப்படுகிறது.

Related Stories: