எண்ணூர் அனல் மின்நிலையத்தில் 500 கிலோ இரும்பு திருடிய காவலாளிகள் 2 பேர் கைது

திருவொற்றியூர்: எண்ணூர் அனல் மின்நிலையத்தில் 500 கிலோ இரும்பு பொருட்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரும்பு மற்றும் மினி சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை எண்ணூர், காட்டுக்குப்பத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் (35). எர்ணாவூர் குப்பத்தை சேர்ந்தவர் சத்யா (37). இவர் இருவரும் கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்கத்தின் புதிய கட்டுமானப் பகுதிகளில் காவலாளிகளாக வேலை பார்த்து வந்தனர்.

தற்போது இப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், மீட்பு பணிகளில் மாநகராட்சி அதிகாரிகளுடன் எண்ணூர் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுகிறது. இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, புதிய கட்டுமான பணிக்காக வைத்திருந்த 500 கிலோ எடையிலான இரும்பு பொருட்களை நேற்று மாலை ரஞ்சித், சத்யா ஆகிய இருவரும் திருடி, ஒரு மினி சரக்கு வேனில் ஏற்றிக்கொண்டு இருந்தனர். இதை பார்த்ததும் சக காவலாளி போலீசாருக்கு ரகசியமாகத் தகவல் தெரிவித்தார்.

  எண்ணூர் இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையில் போலீசார் விரைந்து வந்து, திருடிய இரும்பு பொருட்களுடன் மினி வேனில் தப்பியோட முயன்ற இருவரையும் மடக்கி பிடித்தனர். இப்புகாரின்பேரில் எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யா, ரஞ்சித் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரும்பு மற்றும் மினி சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: