சென்னையில் தொடரும் கனமழை; அமைச்சர்கள், மேயர் அவசர ஆலோசனை: ரிப்பன் மாளிகையில் நடந்தது

சென்னை: சென்னையில் மழை தொடர்வதால், எடுக்கப்பட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், மேயர் மற்றும் உயர் அலுவலர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழை வெளுத்து வாங்குகிறது. இரவு நேரங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளால் தாழ்வான பகுதிகளில் கூட வெள்ளம் நீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது.

 மேலும், மழைநீர் வடிகால் இல்லாத பகுதிகளில் மட்டுமே தற்போது தண்ணீர் தேங்கியுள்ளது. அதையும் முழு அளவில் அகற்றுவதற்காக அதிக குதிரை திறன் கொண்ட மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் ஆற்றங்கரையோரங்களில் வசிப்பவர்களை வெளியேற்றி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட தேவைகளை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது.

இந்நிலையில் நேற்றிரவும் விடிய விடிய மழை வெளுத் வாங்கியது. அதே நிலை காலையிலும் தொடர்கிறது. இதனால் மழைநீர் தேங்கும் இடங்களில் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்நிலையில், மழை தொடர்பாக  மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ரிப்பன் மாளிகையில் இன்று காலை நடைபெற்றது.

 கூட்டத்தில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, மாநகராட்சி ஆணையாளர் ககன் தீப் சிங் பேடி, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ் குமார் உட்பட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மழை பாதிப்புகளை உடனுக்குடன் சீரமைப்பது குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை மீட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

 மழை இன்னும் அடுத்தடுத்த நாட்களுக்கும் தொடர்ந்தால் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Related Stories: