தேனி மாவட்டம் முழுவதும் 6 நகராட்சி, 22 பேரூராட்சிகளில் வார்டுசபை கூட்டம்-பொதுமக்கள் அமோக வரவேற்பு

தேனி : தேனி மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 நகராட்சிகள் மற்றும் 22 பேரூராட்சிகளில் நேற்று வார்டு சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன.உள்ளாட்சி தினத்தையொட்டி நேற்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வார்டு பகுதிசபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. தேனி மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 நகராட்சிகள் மற்றும் 22 பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளில் நேற்று வார்டு பகுதி சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தேனி அல்லிநகரம் நகராட்சியில் 10வது வார்டில் வார்டு கவுன்சிலரும், நகர்மன்றத் தலைவருமான ரேணுப்பிரியா பாலமுருகன் தலைமையில் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார் முன்னிலை வகித்தார். இதில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ சரவணக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் வார்டு பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின்போது, பெரும்பாலானோர் சுகாதார வசதி, பேவர் பிளாக் சாலை வசதிகள் குறித்து கோரிக்கை விடுத்தனர். குடிநீர் குழாய் இணைப்பு வைப்புத் தொகையை குறைக்க கோரிக்கை வைத்தனர். இக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தேனி நகராட்சி 20வது வார்டில் வார்டு கவுன்சிலர் பாலமுருகன் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடந்தது. இதில் நகர்மன்றத் தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன், நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார், சுகாதார அலுவலர் அறிவு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் எம்.ஜி.ஆர் நகரில் நீண்டகாலமாக பட்டா இல்லாமல் இருப்பவர்களுக்கு பட்டா பெற்றுத் தரவேண்டும், பொதுக்கழிப்பறை, அங்கன்வாடி மையம், நடைபயிற்சி மேடையுடன் கூடிய பூங்கா அமைக்க கோரினர்.

தேனி நகராட்சி 19வது வார்டில் நடந்த வார்டு பகுதிசபா கூட்டத்திற்கு வார்டு கவுன்சிலரும் பகுதிசபாவின் தலைவருமான நாராயணபாண்டியன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் வார்டு பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் மூன்று இடங்களில் வார்டு பகுதி சபா கூட்டங்கள் நடந்தன. இதில் அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் தலைமை வகித்தனர். பேரூராட்சித் தலைவர் மிதுன்சக்கரவர்த்தி, பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத்துறை, சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வீரபாண்டி பேரூராட்சியில் வீரபாண்டி, வயல்பட்டி, முத்துத்தேவன்பட்டி ஆகிய பகுதிகளில் வார்டு சபா கூட்டங்கள் நடத்தப்பட்டன. இக்கூட்டங்களுக்கு அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் தலைமை வகித்தனர். இக்கூட்டங்களில் பேரூராட்சி தலைவர் கீதாசசி, செயல்அலுவலர் ஆறுமுகநயினார், பேரூராட்சி இளநிலை உதவியாளர் வாசிமலை கலந்து கொண்டனர். இக்கூட்டங்களில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பூதிப்புரம் பேரூராட்சியில் மூன்று இடங்களில் வார்டு பகுதி சபா கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் தலைமை வகித்தனர். இக்கூட்டங்களில் பேரூராட்சித் தலைவர் கவியரசு, பேரூராட்சித் துணைத் தலைவர் பொன்னையன், பேரூராட்சி செயல்அலுவலர் விஜயலட்சுமி கலந்து கொண்டனர். இக்கூட்டங்களின் போது, 9வது வார்டில் சின்டெக்ஸ் தொட்டி அமைக்க வேண்டும், 4வது வார்டில் சாக்கடை வசதி செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

வார்டு சபை கூட்டங்களுக்கு அந்தந்த வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் உற்சாகமாக வந்து கலந்து கொண்டு தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து வலியுறுத்தினர். இந்த வார்டு பகுதி சபா கூட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு கிடைத்துள்ளது. தேனி நகரில் வசிக்கும் புவனேஸ்வரி, வனிதா ஆகியோர் கூறுகையில், ‘‘எங்கள் பகுதிக்கு என்ன தேவையென்பதை கவுன்சிலர்தான் நகராட்சி நிர்வாகத்தில் பேசி நிறைவேற்றும் வகையில் நிலை இருந்தது.

முதன்முறையாக வார்டு பொதுமக்களே நேரடியாக நகராட்சி நிர்வாகத்தை அணுகி தங்கள் தேவையை நேரடியாக சொல்லி அதனை அடுத்த கூட்டத்தில் முடிவு அறியும் வகையிலான கூட்டமாக வார்டு பகுதி சபா கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் மக்களோடு, உள்ளாட்சி நிர்வாகத்தின் தொடர்பினை அதிகப்படுத்தி உள்ளது. இத்திட்டத்தை அறிவித்த முதல்வரை பாராட்டுகிறோம்’’ என தெரிவித்தனர்.

தேனியை சேர்ந்த சமூக நல்லிணக்க பேரவை நிர்வாகி முகமது சபி கூறுகையில், ‘‘வார்டு சபை கூட்டம் நடத்துவதன் மூலம் அரசுக்கும், மக்களுக்குமான இடைவெளி குறைகிறது. மக்களின் தேவைகளை நேரடியாக நிர்வாகத்திற்கு அறியச் செய்து, இதன் முடிவுகளை அறிந்து கொள்ள முடிகிறது. அதிகாரிகளுக்கும், மக்களுக்குமான நெருக்கம் அதிகரிக்கச் செய்கிறது’’ என்றார்.

தொழிலதிபர் டாக்டர் மகாராஜன் கூறுகையில், ‘‘ஊராட்சி மக்களுக்கு கிடைத்த வாய்ப்பு போல நகர்புற வார்டுகளில் வசிப்பவர்களுக்கும் பகுதி சபா கூட்டம் நடத்த வாய்ப்பினை தமிழக முதல்வர் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது.

இதன்மூலம் மக்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வாய்ப்பு அதிகரித்துள்ளது. வார்டு பகுதி சபா கூட்டங்கள் நடத்துவது போல வார்டு குழு உறுப்பினர்கள் தேர்வும் நடத்தப்பட்டுள்ளது. இக்குழுக்களில் உள்ள உறுப்பினர்கள் தேர்வு முறையை பகுதி சபா கூட்டங்கள் மூலமாக தேர்வு செய்தால் ஜனநாயக முறைப்படி மக்களுக்கான அடிப்படை உரிமை உருவாகும் என்பதால் பகுதிசபா கூட்டங்களின் மூலம் வார்டு குழு உறுப்பினர்கள் நியமித்தால் அரசுக்கு இன்னமும் நல்ல பெயர் ஏற்படும்’’ என்றார்.

Related Stories: