வாடகை செலுத்தாத 24 கடைகளுக்கு சீல்-ஊட்டி நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

ஊட்டி :  ஊட்டி நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 24 கடைகளுக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது. ஊட்டி நகராட்சி மார்க்கெட், எட்டின்ஸ் சாலை, சேரிங்கிராஸ் உட்பட நகரின் பல பகுதிகள் என மொத்தம் 1587 கடைகள் உள்ளன. கடந்த 1.7.2016 முதல் வாடகை மறு நிர்ணயம் செய்து உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டதில், மண்டல அளவிலான கண்காணிப்பு குழு ஏற்படுத்தி வாடகை மறு நிர்ணயம் மேற்கொள்ள தீர்ப்பளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், குழு அமைக்கப்பட்டு வாடகை மறு நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் கடந்த 2016ம் ஆண்டு முதல் நகராட்சிக்கு செலுத்த வேண்டியை வாடகை பாக்கியை வியாபாரிகள் செலுத்தாமல் இருந்ததால் வாடகை நிலுவைத் தொகை மட்டும் ரூ.51 கோடியாக உயர்ந்தது. இதனால் நகராட்சியின் நிதி ஆதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மின்வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தொகை, நகராட்சி பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சேமநல நிதி, ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகை உள்ளிட்டவைகளை தர முடியாத நிலை ஏற்பட்டதுடன், நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் ஏதுவும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வாடகை பாக்கியை வசூல் செய்ய நகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டியது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வாடகை பாக்கி செலுத்தாத 700க்கும் மேற்பட்ட கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்தது. இதனை தொடர்ந்து சிலர் முழுமையாகவும், படிப்படியாகவும் வாடகை பாக்கியை செலுத்தினர். இதன் மூலம் இதுவரை நகராட்சிக்கு சுமார் ரூ.30 கோடி வாடகை பாக்கி வசூலானது. இன்னும் ரூ.20 கோடிக்கு மேல் வாடகை பாக்கி வசூலாக வேண்டியுள்ளது. இன்னும் பலர் வாடகை பாக்கி செலுத்தாமல் உள்ளனர்.

இந்நிலையில், நீண்ட காலமாக நிலுவை வைத்துள்ளவர்கள் மற்றும் அதிக தொகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு கடந்த சில நாட்களாக நகராட்சி நிர்வாகம் சீல் வைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள 24 கடைகளுக்கு சீல் வைக்கும் பணிகள் வருவாய் ஆய்வாளர் நஞ்சுண்டன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கும் பணிகள் மீண்டும் துவங்கியுள்ளதால் வியாபாரிகள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.

Related Stories: